

த
ன் மீதான நில ஆக்கிரமிப்புப் புகார் தொடர்பாக அரசு அளித்த அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றத்தால் கண்டனத்துக்கு உள்ளாகிப் பதவி விலகியிருக்கும் கேரள அமைச்சர் தாமஸ் சாண்டியின் விவகாரம் பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. அவருக்குச் சொந்தமான நிறுவனம் ஆலப்புழையில் அரசு இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்த உடனேயே அவர் பதவி விலகியிருந்திருந்தால், பிரச்சினை பெரிதாகியிருக்காது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான தாமஸ் சாண்டி, இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்குள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே பெரும் கசப்பையும் ஏற்படுத்திவிட்டார்.
ஆலப்புழையில் உள்ள ‘லேக் பேலஸ் ரிசார்ட்’ என்ற தங்கும் விடுதியின் உரிமையாளர்களில் தாமஸ் சாண்டியும் ஒருவர். அந்த விடுதி அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை வெளியிட்டார். அதை ரத்துசெய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார் தாமஸ் சாண்டி. ‘அரசுக்கு எதிராகவே மனு தாக்கல் செய்துள்ள நீங்கள், அதற்குப் பதிலாகப் பதவியிலிருந்து விலகலாம்’ என நீதிமன்றம் கண்டித்த பிறகுதான் தாமஸ் சாண்டி பதவி விலகினார்.
இந்த விவகாரத்தை வேறு கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தாமஸ் சாண்டி கலந்துகொண்ட மாநில அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தது. நீதிமன்றத் தில் அரசுக்கு எதிராகவே வழக்குத் தொடுத்த பிறகு, அமைச்சராக நீடிக்க சாண்டிக்கு உரிமையில்லை என்றும் வாதிட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் வருவாய்த் துறை அமைச்சருமான இ.சந்திரசேகரன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். எனவே, தாமஸ் சாண்டி யின் செயல் அக்கட்சிக்கு கோபத்தை ஊட்டியிருக்க வேண்டும். தாமஸ் சாண்டி விலகியதால் அவருடைய கட்சியைச் சேர்ந்த ஏ.கே.சசீந்திரனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஒரு பெண்ணிடம் அலைபேசியில் பாலியல்ரீதியாகப் பேசியதற்காகப் பதவி விலக்கப்பட்டவர் சசீந்திரன் என்பது வேறு விஷயம்!
இந்த விவகாரம் உச்சத்துக்குச் சென்ற உடனேயே சாண்டியை அமைச்சரவையிலிருந்து நீக்கியிருக்க வேண்டும் முதல்வர் பினராயி விஜயன். அதைச் செய்யாமல், சாண்டியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவெடுக்கட்டும் என்று காத்திருந்தது விமர்சனத்துக்குரியது. தாமஸ் சாண்டிக்கு அரசு ஆதரவாக நடந்துகொள்வதாகவே பலராலும் விமர்சிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிக்கொள்ளும் கேரள இடதுசாரி அரசுக்கு இவ்விவகாரம் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், கூட்டணிக் கட்சி யைச் சேர்ந்தவர் என்றாலும், ஆதாரபூர்வமாக ஊழல் புகார்கள் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்வதுதான் ஒரு அரசுக்கு அழகு. இந்தப் பாடத்தைக் கேரள அரசு மட்டுமல்ல, தமிழக அரசும் கற்றுக்கொள்ள வேண்டும்!