

ஆ
ளும் அதிமுகவின் இரு அணிகளுக்குள் நடந்த பலப் பரீட்சையில் ஒரு முக்கிய நகர்வாக கட்சியும் சின்னமும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்குக் கிடைத்திருக்கின்றன. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையத்துக்குப் பெரிய சிரமம் ஏற்படவில்லை. முன்னதாக இருவேறு கூறுகளாக இருந்த பழனிசாமி – பன்னீர்செல்வம் இருவர் தலைமையிலான அணிகளும் ஒன்றுசேர்ந்துவிட்ட பின், சட்ட மன்றம், நாடாளுமன்றம், கட்சி அமைப்பு மூன்றிலும் உள்ள உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய முடிவை ஆணையம் வழங்கிவிட்டது. பெரிய வெற்றி இது என்றாலும், முழு வெற்றி அல்ல.
கவர்ச்சியும் வசீகரமும் உறுதியான தலைமைப் பண்பும் கொண்ட தலைவர் மரபைக் கொண்ட அதிமுகவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை நிரப்பக் கூடியவர்களாக பழனிசாமி, பன்னீர்செல்வம் இல்லை என்ற குரல் கட்சித் தொண்டர்களிடம் வலுவாகக் கேட்கிறது. மாநிலத்தின் உரிமைகளும் நலன்களும் பறிபோகின்றன என்பதோடு, டெல்லிக்கு முன் நிமிர்ந்து நிற்கும் தலைமை என்ற பெயரும் பறிபோய்க்கொண்டிருப்பதைக் கட்சியின் தொண்டர்கள் ரசித்துக்கொண்டிருக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் பதவிக்காக எதையும் இழக்கத் துணிந்துவிட்டார்கள் என்ற பேச்சு பொதுத் தளத்தில் வெளிப்படையாகவே பேசப்படுகிறது. பழனிசாமி – பன்னீர்செல்வம் அணிகளின் இணைப்பும் ஒன்றிணைந்ததாகத் தெரியவில்லை. “மாதங்கள் கழிந்தாலும் மனங்கள் இணையவில்லை” என்று பன்னீர்செல்வம் அணியின் தளகர்த்தர்களில் ஒருவரான மைத்ரேயன் வெளிப்படையாகவே தெரிவித்தார். “அது மைத்ரேயனின் தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல; தொண்டர் களுடைய கருத்தும்தான்” என்று இன்னொரு முக்கிய தலைவரான நத்தம் விசுவநாதனும் வழிமொழிந்தார். மதுரையில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியிலும் இரு அணிகளுக்கும் இடையிலான பூசல் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியை பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். கீழே நிர்வாகிகள் நிலையிலும் இதே நிலைமைதான் நிலவு கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சின்னத்தை இழந்தாலும், கட்சி வட்டாரத்தைத் தாண்டியும் தினகரன் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிவருவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆக, சின்னம் கிடைத்துவிட்டதை அரை இறுதிப் போட்டியில் பழனிசாமிக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சூட்டோடு சூடாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனும் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் முதல்வர் பழனிசாமி எதிர்கொள்ளும் அமிலச் சோதனையாக இந்த இடைத்தேர்தல் அமையப்போவது உறுதியாகிவிட்டது.
பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மூவருமே ஒரு விஷயத்தை நினைவில் கொள்வது முக்கியம். எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ இவ்வளவு செல்வாக்கைக் கட்சியில் பெற்றிருந்ததற்குக் காரணம் மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு. மாநிலத்தின் உரிமைகளைப் பறிகொடுக்காமல், டெல்லியிடம் பேரம் பேசுவதில் அவர்களுக்கு இருந்த தெளிவும் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவருவதில் அவர்கள் காட்டிய அக்கறையும். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் முதலுக்கே மோச மாகிவிடும்!