குறையட்டும் பொதுமக்களின் ஆவணச் சுமை

குறையட்டும் பொதுமக்களின் ஆவணச் சுமை
Updated on
2 min read

மக்களவையில் ஜூலை 26 அன்று தாக்கல் செய்யப்பட்ட, ‘பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுத் திருத்த மசோதா 2023’ நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு வழிவகுக்கிறது. கல்வி நிலையங்களில் சேர்க்கை, வாகன ஓட்டுநர் உரிமம், அரசு வேலைகள், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, திருமணப் பதிவுச் சான்றிதழ் எனப் பல்வேறு அரசு ஆவணங்களையும் சேவைகளையும் பெறுவதற்கான சான்றாக இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்த முடியும் என்பது வரவேற்புக்குரியது.

இந்தியாவில் பிறப்பு-இறப்புகளையும் அவை தொடர்பான பிற விவகாரங்களையும் பதிவுசெய்து முறைப்படுத்த, ‘பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம்’ 1969இல் இயற்றப்பட்டது. இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவின் மூலமாகத்தான், இந்தச் சட்டத்தில் முதல் முறையாகத் திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இந்த மசோதா முன்வைக்கும் திருத்தங்களின்படி, பதிவுசெய்யப்படும் பிறப்பு-இறப்புகள் அனைத்தையும் மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தலைமைப் பதிவாளரிடம் மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைமைப் பதிவாளர் அலுவலகம், பிறப்பு-இறப்புகள் குறித்த மையப்படுத்தப்பட்ட பதிவேட்டைப் பராமரிக்கும். இந்தப் பதிவேடானது அரசிடம் உள்ள பிற தரவுத் தளங்களை மேம்படுத்த உதவும் என்றும், அரசு சேவைகள் - சமூக நலத் திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடனும் திறன்மிக்க வகையிலும் பொதுமக்களுக்குக் கொண்டுசேர்க்கப் பயன்படும் என்றும் அரசு கூறுகிறது.

பிறப்பு-இறப்புகளின் டிஜிட்டல் பதிவுமுறைக்கும் சான்றிதழ்களை மின்னணு மூலம் பெற்றுக்கொள்வதற்கும் இந்த மசோதா வழிவகுக்கிறது. தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரை இழந்த அல்லது பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் அல்லது திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆகியோரின் பிறப்பைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் சேர்க்கப்பட இருக்கின்றன. மசோதா சட்டமாகிவிட்ட பிறகு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் அரசிடமிருந்து ஆவணங்களைப் பெறும் நடைமுறை படிப்படியாக டிஜிட்டல்மயமாக்கப்பட்டுவருகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான சான்றுகளைத் தர வேண்டிய நிலை உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களும் காலதாமதமும் பெரிதாகக் குறைந்துவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. அதோடு ஆவணங்களில் எழுத்துப் பிழையோ தகவல் பிழையோ இருந்தால் அதைத் திருத்துவதற்கான நடைமுறைகள் இன்னொரு ஆவணத்தைப் பெறுவதற்குரிய உழைப்பைக் கோருகின்றன.

இந்தப் பின்னணியில், ஒருவர் பிறந்த தேதி, இடம் இரண்டுக்கும் வெவ்வேறு சான்றுகள் தர வேண்டியிருப்பதைத் தவிர்ப்பதற்காக இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதும் அதைப் பிற ஆவணங்களைப் பெறுவதற்கான சான்றாகப் பயன்படுத்த முடியும் என்பதும் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

மையப்படுத்தப்பட்ட பதிவேட்டிலிருந்து வழங்கப்படும் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழ்களை, பிற அரசு ஆவணங்கள், சேவைகளைப் பெறுவதற்கான சான்றுகளாக அனைத்து மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் ஏற்றுக்கொள்வதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதிக எண்ணிக்கையிலான ஆவணங்களைச் சான்றாக அளிக்க வேண்டிய சுமையிலிருந்து மக்களை முழுமையாக விடுவிக்க முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in