

உ
ள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் கால தாமதம் ஏற்பட்டதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டிருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். வழக்கை எதிர்கொள்ள இந்த மன்னிப்பு உதவலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதன் காரணமாக, தமிழக மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் துயரங்களுக்கு மாநில அரசும் தேர்தல் ஆணையமும் என்ன பரிகாரம் செய்யப்போகின்றன?
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016 அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடையும் முன்பே தேர்தல் நடத்தப்பட்டு, பதவிக் காலம் முடிந்த மறுநாள் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவியேற்க வேண்டும். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படவில்லை. தனது தன்னாட்சி அதிகாரத்தை மறந்துவிட்டு தேர்தல் ஆணையமும் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின்படியே இயங்கி வருகிறது.
எனவேதான், மன்னிப்புக் கேட்டுவிட்டார்கள் என்பதற்காகத் தேர்தல் ஆணையத்தை அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவித்துவிடலாமா என்ற வாதமும் எழுந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக் கான கால தாமதம் திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே.. தெரிந்தே செய்த தவறு என்பதே அந்த வாதத்தில் உள்ள நியாயம். சில நாட்களுக்கு முன்பு, ஆர்ஜிதம் செய்த நிலத்தைத் திரும்ப ஒப்படைக் கும் விவகாரத்தில் தமிழக அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘உயர் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காகத் தமிழக அரசுக்கு எதிராக ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தில் அந்த மாநில அரசுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகூட நிலுவையில் இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் போடுகிற முட்டுக்கட்டைகளைத் தாண்ட முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்தான் கடைசியில் நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாததால், அடித்தட்டு மக்களின் குடிநீர், சுகாதார ஆதாரங்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்திருக்கின்றன. தமிழகமெங்கும் திரும்பிய இடமெல்லாம் குப்பைக் கூளமாகக் காட்சியளிப்பது, டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது போன்றவற்றுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது. ஏற்கெனவே விவசாயம் பொய்த்துள்ள நிலையில், பல்வேறு அரசு திட்டப் பணிகள் நடக்காததால் கிராமப்புற கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஆதாரங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. மத்திய அரசின் 14-வது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியையும் முழுமையாகக் கேட்டுப் பெற முடியவில்லை. நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்பவர்கள், இந்த பாதிப்புகளுக்கு எல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?