ஊழல் வழக்குகள்: பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை

ஊழல் வழக்குகள்: பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை
Updated on
2 min read

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குத் தமிழ்நாடு ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைக்காததால், அந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 11ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

சென்னையில் குட்கா, பான் மசாலா நிறுவன குடோன்களில், வருமான வரித் துறை 2017இல் நடத்திய சோதனையில் நாள்குறிப்பு உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கின. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களை சென்னையில் விற்பனை செய்வதற்கு உதவியதற்குப் பணம் கைமாறியதும் அந்த நாள்குறிப்பு மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2018இல் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2022இல் தமிழ்நாடு அரசு சிபிஐ-க்கு இசைவு ஆணையை வழங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநரின் அனுமதிக்காக 2022 செப்டம்பரில் அரசு கடிதம் எழுதியது. ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில், வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுவருகிறது.

காலதாமதம் தொடர்பாக சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதியின் புகாருக்கு, வழக்கு குறித்த ஆவணங்கள் சட்டப் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது. எனினும், சிபிஐ வழக்குப் பதிவுசெய்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தாமதம் நீடிப்பது விமர்சிக்கப்படுகிறது.

அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ஒருபுறம் இருக்க, தற்போதைய திமுக அமைச்சர்கள், அவர்கள் மீதான பழைய வழக்குகளில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கைக்குப் பின்னர், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் தன்னை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளையும் அமலாக்கத் துறை மேற்கொண்டுவருகிறது.

ஊழலில் சிக்கியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு உள்ளாகத்தான் வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதான புகார்கள் தொடர்பாக மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதும், அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் மெத்தனம் காட்டப்படுவதும் ஊழல் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் குலைக்கின்றன.

கடந்தகால தமிழக அரசியலைப் பார்க்கும்போது, அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது என்பது மாறி மாறி வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் மக்களுக்குப் பழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்குப் போடுவது; பின்னாளில் அந்த ‘முன்னாளை’யே தனது கட்சிக்குள் சேர்த்துக்கொள்வதும் தொடர்கதையாகிவிட்டது.

அடுத்த கட்சியில் இருந்தால் ஊழல்வாதி; அவரே தன் கட்சிக்குள் வந்தால் பரிசுத்தவாதி என்ற அரசியல் கண்கட்டு வித்தைக்குத் தமிழகமும் தப்பவில்லை. இந்நிலையில், அரசியல் சமரசத்துக்கு இடமின்றி, ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரின் மீதும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் பாய வேண்டும்; அதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in