

உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளை எந்தெந்த அமர்வுகள் விசாரிக்க வேண்டும் என்பதையும் அந்த அமர்வுக்கான நீதிபதிகள் யார் என்பதையும் தீர்மானிக்கிற முழுமையான அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கே உண்டு. அந்த அதிகாரத்தைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அவரோடு தொடர்புடைய வழக்கிலேயே உறுதிசெய்திருப்பது சர்ச்சைக்கு உரிய செய்தியாக மாறியிருக்கிறது.
‘பிரசாத் கல்வி அறக்கட்டளை’ என்ற நிறுவனம், ஒரு வழக்கில் தனக்குச் சாதகமான தீர்ப்பு வருவதற்காக ஒடிஷா உயர் நீதிமன்ற நீதிபதியை அணுகியது என்பது அந்த வழக்கின் தொடக்கம். அந்த நீதிபதி ஊழல் செய்தார் என்றோ, ஊழலுக் குத் துணை நின்றார் என்றோ காட்ட ஆதாரம் ஏதுமில்லை. இந்நிலையில், அந்த நீதிபதி மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு அறக்கட்டளை முயற்சித்தது என்பது நிரூபிக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, ஊழலை மறைக்கும் நோக்கில் நீதிபதிகளை நியமிக்கத் தனக்குள்ள அதிகாரத்தைத் தலைமை நீதிபதி வலியுறுத்துகிறார் என்று வழக்கறிஞர்கள் வாதிட்டது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், தான் சம்பந்தப்பட்டுள்ள வழக்கில், தன் தலைமையிலேயே அமர்வை ஏற்படுத்திக்கொள்ள முயன்றார் என்ற எண்ணம் ஏற்படாமல் மிஸ்ரா தவிர்த்திருக்கலாம். வேறு மூத்த நீதிபதிகள் கொண்ட அமர்வைக்கூட நியமித்திருக்கலாம்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோடு தொடர்புள்ள வழக்கு என்பதால், அவருக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதியான சலமேஸ்வர் தலைமை நீதிபதியைத் தவிர்த்த பிற நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கட்டும் என்று ஆணை யிட்டார். அமர்வுக்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்குத்தான் உண்டு என்பதை அங்கீகரிக்கும் வகையில், அவர் நீதிபதிகளை நியமிக்காமல் இருந்திருக்கலாம். கடைசியில், சலமேஸ்வர் பிறப்பித்த ஆணையை தலைமை நீதிபதி ரத்துசெய்துவிட்டார். ஒருபக்கம் தலைமை நீதிபதிக்குரிய கடமை, இன்னொரு பக்கம் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய சூழல் என்று இரண்டு பிரச்சினைகளையும் தீபக் மிஸ்ரா எதிர்கொண்டிருக்கிறார். இச்சூழலில், தன்னைப் பற்றி வழக்கை விசாரிக்கும் அமர்வில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதைத் தலைமை நீதிபதியே தீர்மானிப்பது எந்த விதத்தில் சரி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சமூக ஆர்வலர்களான வழக்கறிஞர்கள், ஊழலுக்கு எதிராக இந்த வழக்கை நடத்துவது பாராட்டுக்குரியது. அதே வேளையில், தங்களுடைய வழக்கை இன்னின்ன நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் அல்லது இன்னின்ன நீதிபதிகள் விசாரிக் கக் கூடாது என்று வாதிடுவதும் சரியல்ல. இந்த விவகாரத்தை விசாரிக்கும் சிபிஐ தன்னுடைய கடமையைச் சரிவர செய்வதற்கு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஒத்துழைக்க வேண்டும். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்ற கருத்து துரதிர்ஷ்டவசமானது. பதற்றமும் குழப்பமும் நீதித் துறையைக் குலைத்துவிடக் கூடாது.