ஜிஎஸ்டி வரிவிதிப்பில் திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?
Updated on
2 min read

பொதுச் சரக்கு, சேவை வரிக்கு(ஜிஎஸ்டி) எதிரான குரல்கள் வலுத்துவந்த நிலையில், வரி விகிதத்திலும் பொருட்கள் பட்டியலிலும் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை குவாஹாட்டியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் மிகப் பெரியவை. 200 பண்டங்கள் இப்போது குறைந்த வரி விகிதங்களுக்கும், வரியற்ற பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளன. வரி கணக்குப் படிவம், வரி செலுத்தும் முறை, கணக்கு காட்டாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதம் என்று எல்லாவற்றிலும் சுமார் 100 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சரியான திட்டமிடலும் விரிவான விவாதங்கள் நடைபெறாமலும் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என்பதை இந்த மாற்றங்கள் நிரூபிக்கின்றன.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தொழில், வர்த்தகத் துறைகள் கடும் அலைக்கழிப்புக்கு உள்ளாகிவிட்டன. கடந்த ஜூலை மாதம் வரி விகிதங்களில் சிறு மாற்றம் செய்த பிறகும் 28% வரி விதிப்புப் பட்டியலில் 250 பண்டங்கள் இருந்தன. இப்போது அவற்றில் 200 விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. பொதுச் சரக்கு, சேவை வரி விகிதத்துக்கு மாறும்போது வரி வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே லட்சியமாகக் கொள்ளப்பட்டு, பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு விகிதங்களில் அவை பகிர்ந்து தரப்பட்டிருக்கிறது. சிறு வியாபாரிகள் என்பதற்கான வரையறையும் இரண்டு முறை மாற்றப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு வரவு-செலவு அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்ய இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. அரசின் வரி வருவாய் மொத்தம் எவ்வளவு இருக்கும் என்று அதிகாரிகளால் இப்போது கூறுவது கடினம். அரசின் நிதி நிர்வாக நலனையும் நுகர்வோர் நலனையும் ஒரே சமயத்தில் கருத்தில்கொள்வது அவசியம். வரி விகிதங்களில் செய்யப்படும் மாற்றங்கள் உடனுக்குடன் அமலுக்கு வருவது நல்லது. இதுவரையில் வரி விகிதம் தொடர்பாக வியாபாரிகளுக்கும் அரசுக்கும் கருத்தொற்றுமை இல்லாததால் நிச்சயமற்ற நிலை இருந்தது; கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதள வலையமைப்பும் முழுமையாகச் செயல்படவில்லை.

அதிக வரி விகிதப் பட்டியலிலிருந்த பண்டங்கள் குறைந்த வரி விகிதப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு குஜராத் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதில் உண்மை இல்லாமல் இல்லை!

கருப்புக் கல், பளிங்குக் கல் போன்றவற்றின் மீதான வரியை 18% ஆகக் குறைத்துவிட்டு, சிமென்ட் மீதான வரியை 28% ஆகத் தொடர்வது வியப்பாக இருக்கிறது. ‘ஒரே நாடு - ஒரே வரி விகிதம்’ என்று முழங்கிவிட்டு, ஒரு சில மாநிலத் தொழில்களுக்கு மட்டும் வரிக் குறைப்பு செய்வது ஒருமைப்பாடாகாது. இனி எதிர்காலத்தில் எந்த வரி விகிதத்தை மாற்றுவதாக இருந்தாலும் அது வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் வரி விகிதங்களை மேலும் குறைப்பதும் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நடைமுறையை மேலும் எளிமைப்படுத்துவதும் அவசியம். இல்லாவிட்டால், இத்தகைய வரிக் குறைப்புகள் மாதந்தோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் போல தொடர் நடவடிக்கையாகிவிடும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in