

சி
றார்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டது தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு உயர் நீதிமன்றத்தின் கீழும் குறைந்தபட்சம் இரண்டு தனி சாட்சி மையங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சிறார்கள் தொடர்பான சட்டங்களில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கேற்பவே இந்த உத்தரவு அமைந்துள்ளது.
மாற்றுத்திறனாளிப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, ‘சாட்சியம் போதுமானதாக இல்லை’ என்று கூறி ரத்துசெய்து டெல்லி உயர் நீதிமன்றம் விடுவித்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவிட்டு, விசாரணை நீதிமன்றம் முதலில் அளித்த தண்டனையை உறுதி செய்தது. இப்படிப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் சாட்சியம் அளிக்க, வழக்கமான நீதிமன்றத்தைவிட தனி இடம் தேவை என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படும் சிறார்களுக்குப் பாதுகாப்பு வழங்க சட்டமிருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி, சிறார்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் சீருடை அணிந்து விசாரிக்கக் கூடாது. சீருடை அவர்களைக் கலவரத்துக்கு உள்ளாக்கும். விசாரணை நடக்கும்போது, பாலியல் வல்லுறவை நிகழ்த்தியவரை எதிரில் நிறுத்திவைத்து சாட்சியம் பெறக் கூடாது. குற்றம் செய்தவரைப் பார்த்த மாத்திரத்தில் அச்சம் அதிகரித்து மேற்கொண்டு பேசுவதற்கே பாதிக்கப்பட்ட சிறார் அச்சப்படலாம். சிறார்களின் சாட்சியத்தை ‘வீடியோ கேமரா’ மூலம் பதிவுசெய்யலாம் அல்லது வெளியிலிருந்து பார்த்தால் சிறார் தெரியாத மாதிரியான கண்ணாடி அறைக்குள் வைத்து விசாரிக்கலாம் அல்லது பிறர் காண முடியாதபடிக்கு மூடிய திரைக்குள் வைத்து விசாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் தனது நிர்வாகத்தில் தனியாக நான்கு சாட்சியறைகளை உருவாக்குவதற்கு ஐநா சபையின் மாதிரிச் சட்டம்தான் உந்துதலாக இருந்தது. 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள், சிறுமியர்கள் சாட்சியம் அளிக்கும்போது அவர்கள் இயல்பாகவும் உண்மைகளை உள்ளபடியே அச்சமில்லாமலும் நம்பத் தகுந்த வகையில் தெரிவிப்பதற்குத் தனி ஏற்பாடுகள் தேவை என்பது சர்வதேச அளவில் உணரப்பட்டிருக்கிறது. சாட்சியம் அளிக்கும் குழந்தைகளுக்கு அதற்குப் பிறகு தீங்கு நேரிட்டுவிடக் கூடாது. வழக்குக்குப் பிறகு, அவர்களை யாரும் எந்த விதத்திலும் பழிவாங்கிவிடக் கூடாது. அத்துடன், ஒரு வழக்கில் சிறார்களைத் திரும்பத் திரும்ப வாக்குமூலம் அல்லது சாட்சியம் அளிக்கும்படி அலைக்கழிக்கக் கூடாது. வழக்கின் மேல் விசாரணையின்போதும் உடன் இருக்க வேண்டும் என்ற நிலையைத் தவிர்க்க வேண்டும்.
இப்படிக் குற்ற வழக்குகளில் பாதிக்கப்படக்கூடிய சாட்சியங்கள் அல்லது தொடர்புள்ள சிறுவர்களுக்கு அளிக்கப்படும் தனி கவனத்தை, பொது நன்மையைக் கருதி உண்மைகளைத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், செல்வாக்குள்ள நபர்களுக்கு எதிராகக் குற்றம்சாட்டும் எளியவர்களுக்கும்கூட காலப்போக்கில் விரிவுபடுத்த வேண்டும்!