மறுமலர்ச்சி பெறட்டும் மகளிர் காவல் நிலையங்கள்

மறுமலர்ச்சி பெறட்டும் மகளிர் காவல் நிலையங்கள்
Updated on
2 min read

பெண்கள் மீதான குற்றங்கள், வன்முறைகளைக் கட்டுப்படுத்த தமிழகக் காவல் துறையில், மகளிர் பிரிவு தொடங்கப்பட்டதன் பொன்விழா ஆண்டு இது. இத்தருணத்தில், ‘அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நடைபெறும் இடங்களாக மாறிவிட்டன’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் தெரிவித்திருப்பது, மகளிர் காவல் நிலையங்கள் சீரமைக்கப்பட வேண்டியதற்கான எச்சரிக்கை மணி.

குடும்ப வன்முறை தொடர்பாகத் தன் மனைவி அளித்த புகாரின் பேரில் எவ்வித முதற்கட்ட விசாரணையும் இல்லாமல், தான் கைது செய்யப்பட்டதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர், திலகர் திடல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் தான் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமர்வு, மகளிர் காவல் நிலையங்களின் செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்களின் தற்போதைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள நீதிபதிகள், குடும்பப் பிரச்சினை தொடர்பான புகார்களில் இருதரப்பினரின் பண பலம், அதிகார பலம் சார்ந்து ஒருசார்புத்தன்மையோடு காவல் நிலையங்கள் செயல்படும் போக்கு அதிகரித்துவருவதாகவும் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 222 மகளிர் காவல் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் வகையில், சில வழிகாட்டு நெறிமுறைகளையும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வளரிளம் பருவப் பெண்களும் இளம்பெண்களும் புகார் அளிக்க ஏதுவாக ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திலும் தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்; குடும்ப நல ஆலோசனை மையங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துவதோடு, ஆலோசனை குறித்த தரவுகளைப் பதிவுசெய்து பராமரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

குடும்ப நல ஆலோசனைக் குழுவில் சமூக சேவகர், பெண் மருத்துவர், பெண் வழக்கறிஞர், பெண் உளவியல் ஆலோசகர் ஆகியோர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறார் குற்றங்களை விசாரிப்பதற்கென்று தனி அறையை ஒதுக்குவதுடன், அது சிறார் மனநிலைக்கு உகந்த வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடமாடும் ஆலோசனை மையங்களையும் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் மீண்டும் நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

குடும்ப வன்முறையாலும் வரதட்சிணை, உடல்ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட பிற வன்கொடுமைகளாலும் பாதிக்கப்படும் பெண்கள், பெண் காவலர்களிடம் தங்கள் பிரச்சினை குறித்து மனம்விட்டுப் பேச முடியும் என்பதற்காகத்தான் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

பெண்களுக்கு ஆதரவான இந்த அமைப்பு ஆண்களுக்கு எதிராகச் செயல்பட்டாக வேண்டும் என்கிற மனநிலையோடு பெரும்பாலான காவலர்கள் நடந்துகொள்வது கண்டிக்கத்தது. இதுபோன்ற செயல்பாடுகள் அண்மைக் காலமாக அதிகரித்துவருவதாக நீதிமன்றமும் கவலை தெரிவித்துள்ளது.

மகளிர் காவல் நிலையங்களின் நோக்கம், பெண்களைப் பாதுகாத்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவதாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தைத் துஷ்பிரயோகக் கூடங்களாக மாறிவிடக் கூடியதாக இருக்கக் கூடாது. மகளிர் காவலர்கள் தங்கள் அதிகார மனோபாவத்தைக் கைவிட்டு, பக்கச் சார்பின்றி நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுவே மகளிர் காவல் பிரிவின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் நோக்கமாக அமையட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in