தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு உதவிய மேம்பாலம்

தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு உதவிய மேம்பாலம்
Updated on
1 min read

சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழும் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டிருப்பதில் மேம்பாலங்களின் பங்களிப்புக் குறித்துப் பேசப்பட வேண்டியது அவசியம்.

சாலைகள், நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள் மீது பல அடி உயரத்தில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. போக்குவரத்துப் பிரச்சினை, பயண நேரத்தைக் குறைக்க, விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலங்கள் மிக முக்கியமான கண்ணிகளாக விளங்குகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட சாலைகள் குறுக்கிடும் பகுதிகளில் கட்டப்படும் மேம்பாலங்கள் பெரும் பலனளிக்கக்கூடியவை. அந்தந்த இடத்தின் தேவையைப் பொறுத்து வெவ்வேறு விதமான மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சராக மு.கருணாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னை அண்ணா சாலையின் முக்கியச் சந்திப்பான ‘ஜெமினி சர்க்கி’ளில் ‘அண்ணா மேம்பாலம்’ கட்டப்பட்டது. சாலை வசதி, வாகன வசதி போன்றவற்றில் பிரச்சினைகள் இருந்த நிலையிலும் அரசியல் நிகழ்ச்சிகள், சுயமரியாதைத் திருமணங்கள் எனப் பொதுநிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் தன்மை கொண்டிருந்தவர் அண்ணா. அந்தப் பிரச்சினைகளிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க அவரும், அவருக்குப் பின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதியும் பெரும் முயற்சி எடுத்தனர். அதன் பலனாக அமைந்ததுதான் அண்ணா சாலை மேம்பாலம். சென்னையின் முதல் மேம்பாலம் என்னும் பெருமையைக் கொண்ட இந்தப் பாலம், தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முதல் புள்ளியாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து, வெவ்வேறு காலகட்டங்களில், கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலம், பாடி மேம்பாலம், மதுரவாயல் மேம்பாலம் எனச் சென்னையில் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்தப் பணியில் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் பங்களித்திருக்கின்றன என்றாலும், கூடுதல் முனைப்புக் காட்டியது திமுக அரசுதான். பிரம்மாண்டமான கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்பட்டதும் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.

வாகனங்களின் எண்ணிக்கையில், டெல்லிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை மாநகரில், பல்வேறு அம்சங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேம்பாலக் கட்டுமானங்கள் பேருதவி புரிந்திருக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளில், சென்னைக்கு வெளியில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி தொடங்கி, பெரும்பாலான நகரங்களில் தரமான மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொழில் துறையில் தமிழ்நாடுபெரும் உயரங்களைத் தொட்டிருப்பதற்கு, சாலைப் போக்குவரத்து வசதியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடும் முக்கியக் காரணி ஆகும்.

இத்தனை சிறப்புகளுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்த அண்ணா மேம்பாலத்தைத் திராவிடத் தன்மையுடன் புதுப்பிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெறுகின்றன. இன்னொருபுறம், புதிய மேம்பாலங்களுக்கான பணிகளும் தொடங்கப்படுகின்றன. இப்படியான முயற்சிகள் தொடர வேண்டும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, தமிழ்நாடு முழுவதும் சாலை, பாலம், மேம்பால வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான தருணமாக ‘அண்ணா மேம்பாலம்-50’ கொண்டாட்டத்தைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் என நம்புவோம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in