

சாதிச் சான்றிதழ் பெற முடியாததால் கல்லூரியில் சேர முடியாத வருத்தத்தில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகள் தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் பெறும் நடைமுறையில் நிலவும் சிக்கல்களையும் அரசு இயந்திரத்தின் செயல்படாத தன்மையையும் காட்டுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தான் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழுக்காக இணையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைக்காததால் மனமுடைந்து விபரீத முடிவை எடுத்துவிட்டார். சாதிச் சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் 2022 ஜூலை மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தபெரியசாமி என்பவரும் அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இதுபோன்ற இறப்புகள் பெரும்பாலும் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடிப் பிரிவுகளின் கீழ் சாதிச் சான்றிதழ் பெறுவதை ஒட்டியே நிகழ்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. பொதுவாக, சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நபரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சாதிச் சான்றிதழும் அவர்களது குடும்பப் பின்னணியும் கணக்கில்கொள்ளப்படும்.
பட்டியல் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்களில் முதல் தலைமுறையாகப் படிக்கும் பலருக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழோ வேறு அரசு ஆவணங்களோ பெற்றிருப்பதற்கான சாத்தியம் குறைவு. அதுபோன்ற நேரத்தில் அதிகாரிகளின் விசாரணைதான் சாதிச் சான்றிதழ் பெறுவதை உறுதிப்படுத்தும். இப்படியான நிலையில் விசாரணையைத் தாமதப்படுத்துவதும் ஆவணங்கள் கேட்டுச் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிப்பதும் கண்டனத்துக்குரியவை.
சம்பந்தப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்தானா என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மெய்த்தன்மை தொடர்பாக விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகளுக்குஉதவுவதற்காக மாவட்டம்தோறும் மானுடவியலாளர்கள் நியமிக்கப்பட்டனர். சான்றிதழுக்காக விண்ணப்பித்திருக்கும் நபரின் இனம் சார்ந்த தனிப்பட்ட கூறுகளை விசாரித்து அதன் அடிப்படையில் மானுடவியலாளர்கள் பரிந்துரைப்பர். ஆனால், அதிகாரிகளுடன் சரியான வகையில் அவர்கள்ஒத்துழைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மானுடவியலாளர்களைத் தெரிவுசெய்யும் கூர்நோக்குக் குழுஉருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி 14 மானுடவியலாளர்கள் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகும் சாதிச் சான்றிதழ் பெறுவதில் கால தாமதம், விசாரணையில் தேக்கம் நிலவுவது அரசின் செயல்பாடுகளின் மீதான அவநம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
இடஒதுக்கீட்டின்படி கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் போன்றவற்றைப் பெறுவதற்குச் சாதிச் சான்றிதழ்களே முதன்மை ஆதாரமாகக் கொள்ளப்படும் சூழலில், அவற்றைத் தகுதிவாய்ந்த நபர்களுக்கு அளிப்பதில் அரசு மெத்தனம் காட்டக் கூடாது. போலிச் சான்றிதழ்களைக் களையெடுப்பதும் இந்தத் துறையில் புழங்கும் பணப் பரிவர்த்தனைகளைத் தடுப்பதும் அவசியம்தான். அதற்காகத் தகுதியுடையோரை அலைக்கழிப்பது தவறு.
குறிப்பிட்ட சில சாதிகளைப் பட்டியல் சாதி - பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பது தொடர்பான நீண்ட கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அரசு இதில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும். சாதிச் சான்றிதழ் பெறுவது தொடர்பாக இனியொரு மரணம்கூட நிகழாமல் தடுப்பது அரசின் தலையாய கடமை.