

இ
ந்திய வானிலைத் துறையின் இந்த ஆண்டு பருவமழை தொடர்பான கணிப்பும் தவறாகியிருப்பது நம்பிக்கையிழக்க வைக்கிறது. கடந்த ஏப்ரலில் ‘வழக்கம்போல’ மழை பெய்யும் என்றது வானியல் துறையின் கணிப்பு. பிறகு, கடந்த ஆண்டு மழையளவில் 96% வரை இருக்கும் என்றது. 98% என்று அடுத்து திருத்தியது. அனைவருக்கும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு மழை பற்றிய எச்சரிக்கையைக் கூறிவருகிறது வானிலைத் துறை. வறட்சி ஏற்படப் போகிறது அல்லது மழை குறைவாகத்தான் இருக்கும் என்று எச்சரிக்கத்தான் வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இன்றைக்கு அது எண் விளையாட்டைப் போல ஆகிவிட்டது.
இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தாலும் இதற்குள் வெவ்வேறு விதமான புவியமைப்புகள், இயற்கைச் சூழல்கள் உள்ளன. இவையனைத்துக்கும் பொதுவான கணிப்பு பொருந்தியே வராது. மழையளவு எச்சரிக்கை என்பது அரசின் கொள்கை வகுப்பாளர்கள் முதல் பங்குச் சந்தை தரகர்கள் வரை அனைவராலும் அவரவர் நோக்கில் கவனிக்கப்படும் ஒரு தகவல். மழை நன்றாகப் பெய்யும் என்றால் அந்த உற்சாகம் எல்லாவற்றிலும் தொற்றும். இல்லையெனில் மந்தநிலை ஏற்பட்டுவிடும். அதற்காக அறிக்கையைத் தவறாகக் கணிப்பது சரியல்ல. இந்த ஆண்டு மும்பை மாநகரம், அசாம், பிஹார் ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, கர்நாடகத்திலும் விதர்பாவிலும் மாதக் கணக்கில் நீடித்த வறட்சி இரண்டுமே ஒரே வானிலை அறிக்கையில் அடங்கிவிட்டது.
இந்திய வானிலையில் கடந்த நூறாண்டாக 89 சென்டி மீட்டர் சராசரியாக மழை பெய்துவருகிறது. இது 10% அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கலாம். இதில் சவால் என்னவென்றால் ஒவ்வொரு மழைப் பருவத்துக்கும் நடுவில் ஏற்படும் மாறுதல்களைக் கணிப்பதும், திடீரென உலக வானிலையில் ஏற்படும் சூறாவளி போன்றவற்றைக் கணிப்பதும்தான். அந்த மாறுதல்கள் இந்தியாவில் எத்தனை மாவட்டங்களைக் குறிப்பாக பாதிக்கும் என்பதையும் சொல்வது அவசியம். இப்போதுள்ளதைப் போல ஒவ்வொரு பருவக்காற்றுக்கும் தலா நான்கு மாதங்களுக்கான வானிலை அறிக்கை தயாரிப்பு முறையை மாற்ற வேண்டும். ‘ஆங்காங்கோ, விட்டுவிட்டோ, பரவலாகவோ மழை பெய்யும்’ என்று கிட்டத்தட்ட சோதிடர் பாணியில் சொல்வதைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
இப்போது விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு முறையை நாடத் தொடங்கியிருக்கிறார்கள், கைப்பேசிகளையும் பயன்படுத்திவருகின்றனர், அவர்களுக்குத் தேவைப்படும் தகவல் எல்லாம் அவருடைய மாவட்டத்தில் இந்த ஆண்டு மழை எப்படி, எவ்வளவு பெய்யும் என்பதுதான். மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட சரியாகச் சொல்வதே சாகுபடிகளைத் தீர்மானிக்க உதவும். இப்போது ‘சூரக் கணினிகள்’ (சூப்பர் கம்ப்யூட்டர்) வந்துவிட்டன, வானிலையைக் கணிப்பதற்கும் மாவட்ட அளவில் அறிவிப்பதற்கும் இந்திய வானிலைத் துறை இவற்றைத்தான் நம்பியிருக்கிறது. பருவநிலையை முன்கூட்டியே எச்சரிக்க உதவியாக இருக்கும். இந்த மாறுதலுக்கு வானிலைத் துறை முன்னுரிமை தர வேண்டும்!