வெறும் விளையாட்டல்ல; மாணவர்களின் எதிர்காலம்!

வெறும் விளையாட்டல்ல; மாணவர்களின் எதிர்காலம்!
Updated on
1 min read

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைத் தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள் இழந்திருப்பது வருத்தத்துக்குரியது. விளையாட்டுத் திறமை மிக்க மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய இந்தத் தவறு, பள்ளிக் கல்வித் துறையிலும் விளையாட்டுத் துறையிலும் நிலவும் மெத்தனத்தின் வெளிப்பாடு எனும் விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், ஜூன் 6 முதல் 12 வரை டெல்லியிலும் மத்தியப் பிரதேசத்தின் போபால், குவாலியர் ஆகிய நகரங்களிலும் நடைபெற்றன. தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை அனுப்புமாறு மே 11ஆம் தேதியே பள்ளிக் கல்வித் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இதில் பங்கேற்கும் வாய்ப்பைத் தமிழ்நாட்டு மாணவர்கள் இழந்துவிட்டனர். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய அளவில் சாதிக்கும் கனவுகளுடன் இருந்த மாணவர்களுக்கு அரசு துணைநிற்காதது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற போட்டிகளில் வெல்லும் பதக்கங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கான புள்ளிகள் வழங்கப்படுவதுடன், பங்கேற்றாலே 50 புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சான்றிதழ் பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் அதற்கான இடஒதுக்கீட்டைப் பெறுவார்கள். எனவே, இந்த வாய்ப்பை இழந்தது மாணவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதில் கோட்டைவிட்டிருக்கிறது.

இது தவறுதான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஒப்புக்கொண்டிருக்கிறார். தகவல் பரிமாற்றக் குழப்பத்தால் நடந்துவிட்ட இந்தத் தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக இளைஞர் நலன் - விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இவ்விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கண்துடைப்பு என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைப் புறந்தள்ள முடியாது.

அதுவும் மாணவர்கள்/மாணவிகளுக்கு எனத் தனித்தனியாக இரண்டு ஆய்வாளர்கள் இருக்கும்போது மாணவர்களுக்கான ஆய்வாளர் மட்டும்தான் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடம் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்ததும் இந்தப் பின்னடைவுக்கான காரணி என்று விமர்சிக்கப்படுகிறது.

இது போன்ற தவறுகளைத் தவிர்ப்பதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு மட்டுமல்லாமல், முதல்வரின் மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் பொறுப்பு இருக்கிறது. அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகளில்பிற பாட வகுப்புகள் நடத்தப்படுவதைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க இயலாமல் போன மாணவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பை ஈடுசெய்வதும் அரசின் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in