

தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருப்பது, அப்பிரிவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 செப்டம்பரில் அனைத்துப் பிரிவு மின் நுகர்வோருக்கும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், ஓராண்டுக்குள் மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் கட்டண உயர்வு பல கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது.
மின் எரிபொருள் மற்றும் மின்சாரக் கொள்முதல் விலை உயர்வால் மின் வாரியத்துக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, 2022-23 தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு மின் கட்டணம் அனைத்து நுகர்வோருக்கும் அதிகரிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஜூலை 1 முதல்என அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவது என்னும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 2.18% மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது; யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18% உயர்வை அரசே ஏற்று, மின் வாரியத்துக்கு அதற்கான மானியத்தைச் செலுத்திவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4.7% கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய நிலை இருந்தாலும், மக்கள் நலன் கருதி 2.18% அறிவிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. அந்த வகையில், வீட்டு மின் இணைப்புகளுக்குக் கட்டண உயர்வு இல்லை என்பதும், இலவச மின் திட்டங்களுக்குப் பாதிப்பு இல்லை என்பதும் ஆறுதல் அளிக்கும் அம்சங்கள்.
எனினும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. தற்போது அதிலிருந்து மீண்டுவரும் நிலையில், அடுத்தடுத்த மின் கட்டண உயர்வு தாங்க முடியாத சுமையாகிவிடும். இது தொழில் நசிவுக்கும் வழிவகுத்துவிடும். தொழில் நிறுவனத்தினருக்கு ஏற்படும் இந்தச் சுமை, கடைசி நுகர்வோரான மக்களின் தலையிலேயே மறைமுகமாக ஏற்றப்படும் அபாயமும் உள்ளது.
இந்தக் கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் உத்தரவை, திமுக அரசு உதவிக்கு அழைத்திருப்பதை ஏற்க முடியவில்லை. மக்களுக்கு உதவும் சேவைத் துறைகளில் லாபம்-நஷ்டம் பார்க்கக் கூடாது என்ற கருத்து அரசியல் மட்டத்தில் உண்டு. இந்தக் கருத்தை ஆட்சியில் இருந்த, இருக்கும் கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதேவேளையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் நொடிந்துபோகும் சூழலும் ஏற்பட்டுவிடக் கூடாது. மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் உத்தரவை அரசு நினைத்திருந்தால் நிறுத்தி வைத்திருக்க முடியும். என்றாலும், அதை அரசு தவிர்த்திருப்பது மின்வாரியத்தின் நலனுக்காக என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அதற்காக ஒவ்வொரு ஜூலையும் மின்சாரக் கட்டணம் உயத்தப்படும் போக்கு அரசுக்கு எந்த வகையிலும் நல்ல பெயரைப் பெற்றுத் தராது. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!