வெளிப்படைத்தன்மையைத் திமுகவிடமிருந்து கற்கட்டும் அதிமுக!

வெளிப்படைத்தன்மையைத் திமுகவிடமிருந்து கற்கட்டும் அதிமுக!
Updated on
1 min read

ட்கட்சித் தேர்தலை முன்னிட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியிருக்கும் திமுக, அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியிடம் கட்சியின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெற்றதை உறுதிசெய்யும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ஆரோக்கியமான, வரவேற்புக்குரிய ஒரு நடவடிக்கை. முதுபெரும் தலைவரான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவுக்குள்ளானதி லிருந்து பல மாதங்களுக்குப் பின், சிரித்தபடி அந்தப் புகைப்படத்தில் காட்சிதருவது அக்கட்சித் தொண்டர்களைத் தாண்டியும் தமிழக மக்களிடையே மகிழ்ச்சியைத் தரக்கூடியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில்தான் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலனும் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த நிலையிலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொதுமக்களிடம் உறுதியாகப் பேசுவதற்கு, அவரை மருத்துவமனையில் நேரில் பார்த்தவர்கள் என்று யாரும் வரவில்லை. ஜெயலலிதா பற்றியும் அவரது உடல்நலம் பற்றியும் ஏராளமான வதந்திகள் தொடர்ந்து வெளிவந்தன. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அவ்வப்போது வெளியிட்ட அறிக்கைகள் அவரது உடல்நிலை குறித்த மக்களின் சந்தேகங்களைத் தீர்க்கவில்லை. மக்களிடம் ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்க்க அதிமுக தரப்பில் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக, அந்தக் காலகட்டத்தில் வெளியான பல்வேறு தகவல்கள் தொடர்பாக மேலோட்டமான கருத்துகள்தான் அதிமுகவினரிடமிருந்து வெளிப்பட்டன. ‘முதல்வர் உடல்நலம் தேறிவருகிறார். இட்லி சாப்பிடுகிறார். தயிர்சாதம் சாப்பிடுகிறார். அதிமுக வேட்பாளர் சான்றிதழில் கையொப்பமிட்டார்’ என்றெல்லாம் தகவல்களை அதிமுகவினர் பரப்பினார்களேயன்றி, அதற்கான ஆதாரமாக ஒரு புகைப்படத்தைக்கூட அவர்கள் வெளியிடவில்லை. அத்தகைய பேச்சுக்கள் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின.

டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நெருங்கும் நிலையில்கூட இன்றும் மர்மத்துக்குரிய, விவாதத்துக்குரிய நாட்களாகவே, அதிமுகவினராலேயே அந்நாட்கள் இன்று பேசப்படுகின்றன. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பவர் அவருடைய குடும்பத்தினரைத் தாண்டி, அவரது கட்சியைத் தாண்டி மக்களுக்கும் உரியவர் என்ற உணர்வை இன்றுவரை அதிமுகவினர் அடைந்ததாகத் தெரியவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நாட்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் தங்கள் வசம் இருப்பதாகச் சொன்னாலும் அதிமுகவினர் இன்றுவரை அவற்றை வெளியிடவில்லை. மாறாக, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலன் குறித்து அவ்வப்போது வீடியோக்களும் புகைப்படங்களும் திமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுவருவது வரவேற்புக்குரிய அணுகுமுறை.

குறிப்பாக, அவரது உடல்நலன் தொடர்பாக மிக மோசமான வதந்தி பரப்பப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பதற்றச் சூழல் ஏற்பட்டபோது, உடனடியாக, கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில், அவருடைய நண்பர்கள் அவரைச் சந்திக்கும் புகைப்படத்தைத் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டது சமூக அக்கறையையும் வெளிப்படுத்தக்கூடியதாகும்.

திமுகவின் இத்தகைய வெளிப்படைத்தன்மை, அணுகுமுறை தொடர வேண்டும். திமுகவின் இந்த வெளிப்படைத்தன்மையைப் பார்த்தாவது அதைக் கற்க அதிமுக முயல வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in