Published : 12 Jun 2023 06:21 AM
Last Updated : 12 Jun 2023 06:21 AM

மேல்பாதி: தீர்க்கப்படட்டும் சாதிப் பிணி!

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை, ஜூன் 7 அன்று வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். இக்கோயிலுக்குள் நுழைவது தொடர்பாக, பட்டியல் சாதியினருக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்துவந்த பிரச்சினையில் தீர்வு எட்டப்படாத நிலையில், காவல் துறைப் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 45 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, 2023 ஏப்ரல் 12 அன்று தக்கார் ஒருவர் நியமிக்கப்பட்டார். எனினும், இது தங்கள் குலதெய்வக் கோயில் என்பதால், அறநிலையத் துறை உரிமை கோர முடியாது என்று சாதி இந்துக்கள் அதை எதிர்த்தனர். கூடவே, கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரும் கிராமவாசிகள் சிலரும் பட்டியல் சாதியினர் கோயிலுக்குள் நுழைவதை எதிர்ப்பதால் பிரச்சினை பெரிதானது.

இந்தச் சூழலில், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர், ஏப்ரல் 8 அன்று இக்கோயிலுக்கு வழிபட வந்தார் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு தரப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பட்டியல் சாதி மக்கள் கோயிலுக்குள் நுழைவது தொடர்பாக விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், கடந்த ஒரு மாத காலத்தில் ஐந்து முறை அமைதிக் கூட்டம் நடத்தியும் சுமுகத் தீர்வுஎட்டப்படவில்லை. பிறகு, மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் எம்.பி., எம்எல்ஏ-க்கள் முன்னிலையில் இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியபோதும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கோயில் திருவிழாவில் பங்கேற்பதிலிருந்து பட்டியல் சாதி மக்கள் விலக்கி வைக்கப்படுவதை எதிர்த்து, உள்ளூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.புகழேந்தி, வி.லட்சுமிநாராயணன் அமர்வு, சாதிப் பாகுபாடின்றிப் பக்தர்கள் அனைவரும் திருவிழாவில் பங்கேற்பதை உறுதிசெய்யும்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு மே 25 அன்று அறிவுறுத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘மேல்பாதி கோயிலில் சட்டப்படி வழிபாட்டுச் சமத்துவம் நிலைநாட்டப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. எனினும், அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், எவரும் நுழைய முடியாத வகையில் கோயில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேல்பாதியில் நடந்து கொண்டிருப்பது ஒரு தனித்த நிகழ்வல்ல; 21ஆம் நூற்றாண்டிலும்கூடத் தீர்க்க முடியாத சாதிப் பிணியின் மோசமான எடுத்துக்காட்டு. அரசமைப்பின் 15ஆவது கூறு, ‘எவர் ஒருவரையும் பொது இடத்தில் நுழையவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்’ என்கிறது; கூறு 17, தீண்டாமையைக் கடைப்பிடிப்பதைக் குற்றமாக அறிவிக்கிறது.

அந்த வகையில், இப்பிரச்சினைக்கு மட்டுமான தீர்வாக அல்லாமல், இதுபோன்ற பிரச்சினைகளே இனி ஏற்படாத வகையில், தீர்க்கமான நடவடிக்கையைச் சமரசமின்றி அரசு மேற்கொள்ள வேண்டும். சமூக நீதி மண்ணாக அறியப்படும் தமிழ்நாட்டில் இனியும் இதுபோன்ற அவலங்கள் தொடரக் கூடாது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x