

அரசு அதிகாரிகள், மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு அனுமதி தராத நிலையில், அவர்களுடைய பெயர்களை, புகைப்படங்களை வெளியிடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரொக்க அபராதமும் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது ராஜஸ்தான் மாநில பாஜக அரசு. நேர்மையான அதிகாரிகள் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிடக் கூடாது என்ற நோக்கிலேயே இது இயற்றப்பட்டிருப்பதாக விளக்கம் வேறு தந்திருக்கிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 197-வது பிரிவும், 1988-ல் இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19-வது உட்கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அதிகாரிகளைப் பாதுகாக்கின்றன. அவ்விரண்டுமே, ‘அரசிடம் முன் அனுமதி பெற்ற பிறகுதான்’ வழக்கு தொடரப்பட வேண்டும் என்கின்றன. இப்போது, பெயரையும் சொல்லக் கூடாது என்கிறது ராஜஸ்தான். ஊழலுக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
மாநில அரசின் முன் அனுமதியின்றி புலன் விசாரணையோ, வழக்கு விசாரணையோ நடைபெறக் கூடாது என்ற தடை மகாராஷ்டிர அரசில் ஏற்கெனவே அமலில் இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு மீது அதிகபட்சம் 90 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது மகாராஷ்டிர சட்டம். ராஜஸ்தானோ 180 நாட்களைத் தருகிறது. மத்திய அரசும் ஊழல் தடுப்புச் சட்டத்தில் இதே போன்ற பிரிவைச் சேர்க்க 2013-ல் உத்தேசித்து அது இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதுவும் இணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கும் மேல் அந்தஸ்துள்ள அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் பற்றிய விசாரணைக்கு அரசு அனுமதி தர வேண்டும் என்கிறது. இணைச் செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் மீதான புகார்களை சிபிஐ விசாரிக்க மத்திய அரசின் முன் அனுமதி தேவை என்ற பிரிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 2014-ல் தீர்ப்பளித்தது. முன் அனுமதி தேவை என்பது ஊழலுக்கு எதிரான சட்டத்தின் உயிர் நாடியையே நீர்த்துப் போகச் செய்கிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.
அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் பால் சட்டத்தை மத்திய அரசு இன்னமும் செயல்படுத்தவில்லை. ஊழல் செய்பவர்களைத் தண்டிக்கவும், நேர்மையானவர்களைப் பாதுகாக்கவும், பொது நன்மையைக் கருதி ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்கு ஆபத்து நேராமல் பாதுகாப்பு அளிக்கவும் வலுவான, வெளிப்படையான சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த அவசரச் சட்ட மசோதாவைச் சட்ட மன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியிருக்கிறது ராஜஸ்தான் அரசு. இதில் பரிசீலிக்க எதுவுமேயில்லை. ஊழல் புகார்களை வெளிவராமல் தடுக்கும் அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும்!