மருத்துவப் பணியாளர் மீதான வன்முறை: களையப்பட வேண்டிய ஆபத்து

மருத்துவப் பணியாளர் மீதான வன்முறை: களையப்பட வேண்டிய ஆபத்து
Updated on
2 min read

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் நோயாளியால் தாக்கப்பட்டிருக்கிறார். மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

கடந்த மாதம் கேரளத்தின் கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் காவல் துறையினரால் அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், வந்தனா தாஸ் என்னும் மருத்துவரைக் கொலைசெய்த நிகழ்வு, அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி போதையில் இருந்தது பின்னர் தெரியவந்தது.

வந்தனா தாஸின் மரணத்துக்கு நீதி கோரி கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதையடுத்து, கேரள மருத்துவப் பணியாளர்கள் - மருத்துவச் சேவை வழங்கும் நிறுவனங்கள் (வன்முறை - சொத்து சேதங்கள் தடுப்பு) சட்டம் 2012இல் அம்மாநில அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

புதிய திருத்தத்தின்படி மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, சிறைத் தண்டனைக் காலம் ஆகியவை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணியாளர்கள் என்பதற்கான வரையறையில் துணை மருத்துவ மாணவர்களும் துணை மருத்துவப் பணியாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த புகார்கள் மீதான விசாரணையில், காவல் துறையினரின் மெத்தனத்தைத் தவிர்க்கும் பொருட்டு, இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்த 60 நாள்களுக்குள் காவல் துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காகக் கேரள உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

மக்கள் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களால் தாக்கப்படும் அவலம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அரங்கேறியிருக்கிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளி ஒருவர், பயிற்சி மருத்துவர் சூர்யாவைக் கத்தரிக்கோலால் தாக்கிய சம்பவம் அவற்றில் ஒன்று. இதையடுத்து, ராஜீவ் காந்தி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்தன. இப்போது அவை குறைந்திருந்தாலும் அவற்றை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கேரளத்தில் இளம் மருத்துவரின் உயிரிழப்புக்குப் பிறகே இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்துக்கு வலுகூட்டப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் உடனடியாக விழித்துக்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்தம் உறவினர்கள் சிலரின்எதிர்பாராத தாக்குதல்களிலிருந்து மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான வலுவான சட்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலும் மாநில அரசுகள் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். மனித உயிர்களைக் காக்கும் பணியில் இருப்போர் மீதான அனைத்து விதமான வன்முறைகளும் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in