

எழுதிய காலத்திலேயே இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்க வேண்டிய முதன்மையான நவீன எழுத்தாளர்களில் ஜெயந்தனும் ஒருவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் என நவீன இலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் தடம் பதித்தவர். ‘கோடு’ சிற்றிதழ், ‘சிந்தனைக் கூடல்’ இலக்கிய அமைப்பு எனத் தன் வாழ்நாளின் இறுதிவரை இலக்கியத்திற்காகவே இயங்கியவர். வறுமை மிகுந்த சூழலில், பள்ளிப் பருவத்திலேயே உழைத்து படித்து, பின்னர் அரசுப்பணியில் படிப்படியாக உயர்ந்தவர். கால்நடை ஆய்வாளராக அவர் பெற்ற கள அனுபவங்களே அவரது பல கதைகளின் மையமாக மாறின.
நாடகத் துறை: நாடகத் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஜெயந்தன், பேராசிரியர் சே.இராமானுஜத்தின் நாடகப் பயிற்சிப்பட்டறையில் நவீன நாடகம் குறித்த பார்வையைச் செழுமைப்படுத்திக் கொண்டவர். அவர் எழுதிய பன்னிரண்டு நாடகங்களில் ‘நினைக்கப்படும்’, ‘மனுஷா மனுஷா’, ‘ஆண் தர்மம்’ ஆகியவை இன்றும் நினைவுகூரத்தக்கவை. மகாபாரதத்தின் திரவுபதி துகிலுரிதலை மறுவாசிப்பு செய்த ‘ஆண் தர்மம்’, ஆண் அதிகார மையத்தின் அரசியலை இன்றும் பொருத்தப்பாடுடைய அதிர்வுகளோடு பேசுகிறது.