

வங்க மொழி இலக்கிய உலகில் ரவீந்திரநாத் தாகூருக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த இடத்தைப் பெற்றவர் இலக்கியப் போராளி மகாஸ்வேதா தேவி. இவரது தந்தை மணிஷ் கட்டக் - கவிஞர், நாவலாசிரியர். தாயார் தாரித்ரி தேவியும் எழுத்தாளர், சமூக சேவகர். அறிவார்ந்த சூழலில் வளர்ந்து, சுயமதிப்பும் சமூகப் பார்வையும் கொண்ட ஆளுமையாக உருவானவர் மகாஸ்வேதா தேவி.
தாகூரின் சாந்திநிகேதனில் உள்ள பாட பவனாவில் மேல்நிலைப்பள்ளிக் கல்வியும், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனது கல்வியறிவு, எழுத்துத் திறன் மட்டுமன்றி தனது வாழ்வையே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்.
வீரியமிக்க படைப்புகள்: தலைமுறை தலைமுறையாகச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஏழைகள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோரைத் தமது கதைமாந்தர்களாகப் படைத்தவர் மகாஸ்வேதா தேவி. அவர்களுடன் ஒன்றுகலந்து வாழ்ந்து, அவர்களது துயர்மிக்க வாழ்க்கையைப் பதிவுசெய்தவர்.
மலைவாழ் பழங்குடி மக்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரை அக்கறையுடன் அணுகி, அவர்களது வாழ்வுக்கான போராட்டங்களில் தன்னையும் இணைத்துக்கொண்ட போராளி. குறிப்பாக, சஃபார் என்கிற பழங்குடி மக்கள் இவரைத் தமது தாய் என்றே அழைத்தனர்.
‘கைதி எண் 1084இன் அம்மா’ என்ற நாவல் (பின்னர் கோவிந்த் நிஹலானி இயக்கத்தில் ‘ஹஸார் செளராஸி கி மா’ என்னும் திரைப்படமாகவும் வந்தது) மூலம் தமிழகத்தில் மகாஸ்வேதா தேவி மிகப் பிரபலமடைந்தார்.
தலைமறைவு இயக்கத்தில் இணைந்து, கைதாகி, சிறையில் சித்திரவதைப்படும் தன்னுடைய மகனைக் காப்பாற்றத் தன்னந்தனியளாகப் போராடும் ஓர் அன்னையின் துயரை மிஞ்சிய மனஉறுதியும் கோழைகளாகிவிட்ட பிற குடும்ப உறுப்பினர்களுமே நாவலின் கதைக் களம்.