உழைப்பின் ருசி!

உழைப்பின் ருசி!
Updated on
3 min read

உழைப்புதான் மனிதர்களை உயர்த்தியது என்பது உலகம் அறிந்ததுதான். எனினும், உழைப்பின் மகத்துவத்தை அனைவரும் முழுமையாக உணர்ந்துகொண்டிருப்பதாகச் சொல்லிவிட முடியுமா என்ன! உழைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது இளம் தலைமுறையினருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நலம் பயக்கும்.

ஆதிகால மனிதர்கள் நிமிர்ந்து நின்று கைகள் விடுவிக்கப்பட்டபோது உழைப்பு என்கிற மாளிகைக்குள் நுழைய முடிந்தது. இல்லாவிட்டால் மனிதர்கள் காடுகளிலேயே கல்லாயுதங்களோடும், காய்கனிகளோடும் காலந்தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

உழைப்பால் உணவு உபரியானபோது ஓய்வு நேரத்தைக் கலைகளை வடிவமைக்கவும், அறிவியல் பார்வையோடு இயற்கையைத் தோண்டித் துருவவும், சமூகத்தைக் கட்டமைக்கவும் மனிதர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அதனால்தான் பண்பாட்டுரீதியாக மனிதர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.

பணியின் தன்மை

செய்கின்ற பணி தன் தன்மையால் ஒன்றைக் கடினமாக்குவதில்லை; செய்யும்போது நமக்குத் தோன்றும் மனநிலையே அதைச் சுகமா, சுமையா என்று கட்டியம் கூறுகிறது. வயிற்றில் 24 மணி நேரமும் சுமப்பது தன்னுடைய குழந்தை என்பதாலேயே தாய்க்கு வலி தெரிவதில்லை.

அரை கிலோ கல்லை வயிற்றில் சகல நேரமும் கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் எந்தப் பெண்ணுக்கும் எரிச்சலே ஏற்படும். தாய்மையைத் தவமாகக் கருதுவதால் அவர்கள் மகப்பேறை வரமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

உழைப்பு கடினமாவது, முடிவைக் காட்சிப்படுத்தாத காரணத்தால். அழகிய கட்டிடம் உருவாகப்போகிறது என்று நினைப்பவருக்குக் கட்டுமானப் பணி கடினமல்ல. அறிவான இளைஞர்களை ஆக்குகிறோம் என்று எண்ணுபவருக்கு ஆசிரியர் பணி அலுப்புத் தட்டுவதில்லை.

வயல்களை மரகதவெளிகள் ஆக்குகிறோம் என்கிற மனத்தோடு வாய்க்காலை வழிப்பவர்களுக்கு வலி ஏற்படுவதில்லை. உயிர்காக்கப் போகிறோம் என்று உணர்பவர்களுக்குப் பணி நேரம் தாண்டியும் அறுவைசிகிச்சை செய்கையில் ஆத்திரம் ஏற்படுவதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in