

‘நாம் செயல்படும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் 300 ஆண்டுகள் கழித்துத்தான் பாலினச் சமத்துவத்தை அடைவோம்’ என ஐ.நா.வின் 2022 ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இப்படியொரு பின்னணியில் இருந்தபடிதான் பெண்கள் ஒவ்வொன்றையும் வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 2025இல் வழங்கப்பட்ட சில தீர்ப்புகள் நம்பிக்கை அளித்தன.
நியாயத் தீர்ப்புகள்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் (2019) குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். 48 சாட்சிகளில் ஒருவர்கூடப் பிறழ்சாட்சியம் அளிக்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வழக்கில் (2024 டிசம்பர் 23) ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலஷ்மி.
இதில் திறம்பட விசாரணையை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மூவருமே பெண்கள்! பணிப்பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு இறக்கும்வரை சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது மிக அரிய நிகழ்வாக இருந்தது.
பின்னடைவுகள்: உத்தரப் பிரதேச மாநிலம் உனாவில் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ததோடு அவருக்கு நிபந்தனை பிணை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விமர்சனத்துக்குள்ளானது. மலையாள நடிகைக்கு எதிரான பாலியல் வழக்கில், நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது இன்னொரு ஏமாற்றம்.
சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த், போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் சிலவற்றில் இரட்டை ஆயுள் தண்டனை, மரண தண்டனை எனக் கடுமையான தீர்ப்புகள் வழங்கப்பட்டபோதும் ஆயிரக்கணக்கான போக்சோ வழக்குகள் தமிழகத்தில் நிலுவையில் இருப்பது பெரும் பின்னடைவே.
போக்சோ நெறிமுறைகள் குறித்துப் போதிய தெளிவின்றிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்படும் காவல் நிலைய விசாரணைகளும் நீதிமன்ற அலைக்கழிப்புகளும் பெரும் அயர்ச்சி அளித்தன. பெண்கள் – சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைத் தமிழக அரசு கடுமையாக்கியது.
காவல் துறையினர், ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் போன்றோர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என்பதும் பாலியல் குற்றவாளிகள் தண்டனைக் காலத்துக்கு முன்னர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்பதும் பாராட்டப்பட வேண்டியவை.
பயிரை மேயும் வேலிகள்: பாலியல் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகும்கூடக் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் அரசுப் பணியில் இருப்பவர்களும் பெண்கள் - சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது, சட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் உள்ள இடைவெளியைப் பறைசாற்றியது.