

அறிவியல் துறையில் பெண்கள் நீண்ட காலமாகப் பல்வேறு முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். தற்போது நமது அரசாங்கங்களும், அறிவியல் தொழில்நுட்பத் துறையும், கல்வி / ஆய்வு நிறுவனங்களும் பல்வேறு வகையில் மகளிரை அறிவியலில் ஈடுபடுத்த முனைகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தேசிய அறிவியல் தினம் 2026 ‘அறிவியலில் பெண்கள் பங்கேற்பதன் மூலம் முன்னேறிய இந்தியாவை ஊக்குவித்தல்’ என்கிற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்து, அறிவியலில் பெண்களின் பங்கைக் கொண்டாடுவதே இதன் நோக்கம். வரலாற்றுரீதியாகச் சமூகச் சார்புகள், பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணிகளால், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் (STEM) பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.
இருப்பினும் அறிவியல் / தொழில்நுட்பத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர்கள் செய்துள்ளனர். உண்மையில், இன்றும்கூட அறிவியல் துறையில் பெண்களுக்குப் பல தடைகள் உள்ளன. மறுபுறம் பல்வேறு கொள்கைகள், திட்டங்கள் மூலம் பல்வேறு வழிகளை அரசுகள் திறந்துவருவதால், பெண்கள் தொடர்ந்து முக்கியப் பங்களிப்புகளை அறிவியல் துறைக்கு வழங்கிவருகின்றனர்.
அரசுத் திட்டங்கள்
மத்திய அரசு முன்னெடுத்துவரும் திட்டங்களில் அறிவியல், பொறியியலில் பெண்கள் (WISE - KIRAN) என்கிற திட்டம் முக்கியமானது. இது முனைவர் பட்டம், முதுகலை ஆராய்ச்சி போன்ற பல்வேறு நிலைகளில் பெண் அறிவியலாளர்களுக்கு ஆதரவை வழங்குகின்றன.
சமூக சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்கள், காப்புரிமை (IPR) பயிற்சி, சர்வதேச ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவையும் இந்தத் திட்டங்களில் அடங்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மாநில அறிவியல் - தொழில்நுட்ப மன்றம் போன்ற அறிவியல் - தொழில்நுட்ப அமைப்புகள், ஆராய்ச்சி - மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பெண் அறிவியலாளர்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்கின்றன.