

தமிழகத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.3 என்கிற அளவுக்குச் சரிந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.
குழந்தை பிறப்பு குறைந்துள்ளதன் தாக்கமாக, எதிர்காலத்தில் பணியாளர் பற்றாக்குறை, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றைத் தமிழகம் எதிர்கொள்ள நேரிடும் என மக்கள்தொகையியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மக்கள்தொகை ஒரு பிரச்சினையா?
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை ஏறக்குறைய 148 கோடி என மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை சீனாவைவிட அதிகம். அதனால், மக்கள்தொகையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.
அதற்கு மாறாக, குழந்தை பிறப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற குரல் தென்னிந்திய மாநிலங்களில் பெருகிவருகிறது. தமிழகத்தின் மக்கள்தொகை 2001இல் 6.24 கோடியாகவும் 2011இல் 7.21 கோடியாகவும் கணக்கிடப்பட்டது; தற்போது இந்த எண்ணிக்கை 7.7 முதல் 8.1 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
அதேநேரத்தில், மொத்தக் கருவுறுதல் விகிதத்தை (Total fertility rate - TFR) பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவு நிகழ்ந்திருக்கிறது. 1971இல் 3.9 ஆக இருந்த இந்த விகிதம், 2001இல் 1.7 ஆகவும் 2026இல் 1.3 ஆகவும் சரிந்திருக்கிறது.
இந்த விகிதம் டெல்லி 1.2, கேரளம் 1.3, மேற்கு வங்கம் 1.3, ஆந்திரப் பிரதேசம் 1.4, மகாராஷ்டிரம் 1.4, பஞ்சாப் 1.4, ஜம்மு காஷ்மீர் 1.4 என்கிற அளவில் உள்ளது. அதேநேரத்தில், வட இந்திய மாநிலங்களான பிஹார் 2.9, உத்தரப் பிரதேசம் 2.6, மத்தியப் பிரதேசம் 2.4, ராஜஸ்தான் 2.3 என்று அதிக அளவில் உள்ளது.
தேசிய அளவில் மொத்தக் கருவுறுதல் விகித சராசரி 1.9. குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் நேரிட்டிருக்கும் இந்தச் சரிவு, தென்னிந்தியாவில் பரந்த அளவில் நிகழ்ந்துவரும் மக்கள்தொகை சார்ந்த மாற்றத்தைத் தெளிவாக உணர்த்துகிறது.