

இந்திய கிராமப்புறங்களின் வேலைவாய்ப்பை மாற்றியமைத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு (MGNREGA), மாற்றாக, 2025 டிசம்பர் 18இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘விக்சித் பாரத் - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G-Bill) மசோதா பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இது கிராம மக்கள் நலத்திட்டத்தின் வீழ்ச்சி எனப் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் எதிர்க்கட்சிகள், மாநிலங்களுக்கான நிதிச் சுமையை உயர்த்தி, வேலைக்கான உரிமை உள்ளிட்ட பல விதிகளை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளன.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் இத்திட்டம் கிராமப்புறங்களில் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கங்களை ஆய்வுசெய்யும் வல்லுநர்கள், இந்த மாற்றத்தை ஒரு ‘கட்டாயச் சீர்திருத்தம்’ என்றே பார்க்கின்றனர்.
ஐந்து மாற்றங்கள்: புதிய திட்டம், முன்பிருந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஐந்து அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. முதலாவதாக, ஆண்டுக்கு 100 நாட்கள் என்கிற வேலைவாய்ப்பு 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, விவசாயச் சங்கங்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, பயிர்ச் சாகுபடிக் காலங்களில் நிலவும் கூலித் தொழிலாளர் தட்டுப்பாட்டைப் போக்க ‘வேளாண் இடைவேளை’ (Agricultural Pause) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, முற்றிலும் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் நடத்தப்பட்ட இத்திட்டம், இனி மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பங்கீட்டுடன் (60:40) செயல்படும். நான்காவதாக, நிதி ஒதுக்கீடு என்பது மாநிலத்தின் வெறும் கோரிக்கையின் அடிப்படையில் அல்லாமல், மாநிலத்தின் வறுமை நிலையை அடிப்படையாகக் கொண்டு அமையும். இறுதியாக, இவை அனைத்தும் ‘விக்சித் கிராமப் பஞ்சாயத்து’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.