

சுதந்திரத்துக்கு முன்பும் (1930 முதல்) பின்பும் இயற்றப்பட்ட 44 மத்திய தொழிலாளர் சட்டங்களில் 15 சட்டங்கள் நீக்கப்பட்டு, எஞ்சிய 29 சட்டங்கள் அமலில் இருந்த நிலையில், அவை நான்கு சட்டத் தொகுப்புகளாகத் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றன.
தொழிலாளர் துறை பொதுப் பட்டியலில் இருந்தாலும், இந்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசிடம் அதிகாரம் குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஊதியங்கள் சட்டத் தொகுப்பு: குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடும் முறையில், தொழிலாளர்களின் சத்துணவு, இதர தேவைகளுக்கான அளவீடுகள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இல்லாமல் குறைக்கப்பட்டுள்ளன.
சராசரி வேலைநாளை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தவும், ‘வேலை நேரப் பரவலை’ 14 முதல் 16 மணி நேரம் வரை நீட்டிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
‘பணியாளர்’, ‘தொழிலாளர்’ என்கிற வரையறைகள் மூலம் பல தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்தின்கீழ் உரிமம் பெறத் தேவையான தொழிலாளர்களின் எண்ணிக்கை 20லிருந்து 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் 50க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட ஒப்பந்ததாரர்கள் சட்டக் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிப்பார்கள். பாதுகாப்புச் சட்டங்கள் பொருந்தக்கூடிய ‘தொழிற்சாலை’ என்பதற்கான வரம்பு மின்சாரத்துடன் 20 எனவும், மின்சாரம் இன்றி 40 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.