

இரைக்காக ஓடும் எந்த ஓர் உயிரினமும் தொடை எலும்பு உடைந்துபோய்விட்டால், அந்த இடத்திலேயே கிடந்து அழுகி இறந்துபோகும். ஆனால், தொடை எலும்பு உடைந்த ஒரு மனிதருக்கு, எலும்பு மீண்டும் கூடும்வரை அவருக்கென மற்றொருவர் உணவு கொண்டுவந்ததற்கும், தோளில் சுமந்து சென்றதற்கும் அம்மனிதரின் அன்பும் காதலும் அக்கறையும் மட்டுமே காரணமாக இருந்திருக்கக்கூடும். அந்த அக்கறைதான் மருத்துவம் வளர்ந்தமைக்கும் காரணமாக இருந்திருக்கும்.
சித்த மருத்துவம் அப்படி ஒரு நீண்ட தமிழ் மரபில் தன் சக உயிரினம் மீதான அக்கறையில் உருவான அறிவியல். சங்க காலத்திலோ அல்லது அதற்கு முன்போ, இந்த உலகு, உயிர், உடல் அதன் சிக்கல்கள் சவால்கள் மனிதர்கள் பற்றி யோசிக்கத் தொடங்கியபோது உருவான தத்துவங்கள், புரிதல்கள்தாம் உலாகாயதம், தேகவாதம், ஆசீவகம், வேதமரபுகள் போன்ற மூத்த தத்துவங்கள்.
இப்படியான தத்துவ அறிவியலின் கூறுகளைக் கொண்டும் பெளத்த, சமண, சைவ சித்தாந்தத் தத்துவங்களை அந்தந்தக் காலத்தில் இணைத்து மெருகேற்றிக்கொண்டும், கூடவே இந்நிலத்தின் நாட்டார் மரபு அனுபவங்களை (folklore practices) கோத்தும் தொகுத்தும் எடுத்தும் மெல்லமெல்ல வளர்ந்தது சித்தர் தத்துவமும் மரபும்.
ஆய்வுகளுக்கான தேவை: தற்போதைய சூழலில் சித்த மருத்துவம் மீதான வெளிச்சமும் நம்பிக்கையும் இடைக்காலத்தைவிடப் பெரிதும் உயர்ந்துள்ளன. கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் தமிழரின் தனி அடையாளமாய் சித்த மருத்துவத்தை அரசியல்பூர்வமாகச் சுமந்தது அதற்கு முக்கியக் காரணம். பனகல் அரசரின் பார்வை சித்த மருத்துவத்தின்மீது படாது போயிருந்தால், டி.வி.சாம்பசிவம் பிள்ளை போன்றோரின் வாழ்நாள் அர்ப்பணிப்பில் சித்த மருத்துவ அகராதி உருவாகாது போயிருந்தால், இத்துறை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது.
பல தமிழறிஞர்கள், மரபு மருத்துவர்கள், சித்த மருத்துவ வம்சாவளி மருத்துவர்கள், 1965க்குப் பின்னர் சித்த மருத்துவத்தைப் பட்டப்படிப்பாகப் படித்து, அறிவியல் புரிதலுடன் விளக்க முற்படும் சித்த மருத்துவர்கள் என எல்லாரும் சேர்ந்து கட்டமைத்ததுதான் இன்றைய சித்த மருத்துவம். இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இம்மருத்துவத்தின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும்? விளிம்புநிலை மக்கள் உள்பட அனைவருடைய சராசரி வாழ்நாளையும் மிகக் கணிசமாக உயர்த்தியது நவீன மருத்துவம்.