

ஒரு வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்யும் நபர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடின வேலைக்கும் ஆக்கபூர்வமான வேலைக்கும் இடையே உள்ள வித்தியாசம் இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாததால், பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேலைப்பளுவால் ஏற்படும் உடல்நல / மனநலப் பாதிப்புகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரத்துக்குப் பின்பு மேலதிகாரிகளிடம் இருந்து வரும் அழைப்புகளையும் இணையவழி வேலைகளையும் நிராகரிக்கும் உரிமைக்கான ‘துண்டிக்கும் உரிமை மசோதா - கேரளம் 2025’ (Kerala’s Right to Disconnect Bill) தாக்கல் செய்யப்பட்டிருப்பது கவனம் ஈர்க்கிறது.