

மூத்த பேராசிரியர், இந்திய விவசாயச் செலவுகள்-விலைகள் ஆணையத்தின் முன்னாள் முழு நேர உறுப்பினர், புதுடெல்லி. தொடர்புக்கு: narayana64@gmail.com
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் காரணமாகக் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு / விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இவையே ஆக்கிரமித்துள்ளதால், இந்தியாவின் உர உற்பத்திக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் உரிய கவனத்தைப் பெறவில்லை. தற்போது நாட்டில் சாகுபடிப் பணிகள் குறைவாக உள்ள பருவம் என்பதால், இதன் பாதிப்பு இன்னும் முழுமையாக உணரப்படவில்லை. இருப்பினும், வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் அதிர்வுகள் இந்தியாவின் வேளாண் நிலைத்தன்மைக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் காரணியாக உருவெடுத்துள்ளன.
அதிகரிக்கும் தேவை
60களில் தொடங்கிய இந்தியாவின் பசுமைப் புரட்சி நமக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கிய அதே வேளையில், வேதி உரங்களைச் சார்ந்திருக்கும் நிலையைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, உலகிலேயே உரங்களை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா தற்போது உருவெடுத்துள்ளது. 1960-61இல் வெறும் 2.95 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் மொத்த உரப் பயன்பாடு, 2024-25இல் 329.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு உர உற்பத்தியானது 2023-24 இல் 219.5 லட்சம் டன் என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டி சாதனை படைத்திருந்தாலும், வளைகுடாப் பிராந்தியத்தின் மீதான நமது இறக்குமதிச் சார்பு இன்னும் பெரிய அளவில் தொடர்கிறது. இந்தியாவின் யூரியா, டி.ஏ.பி. (DAP) இறக்குமதியில் சுமார் 30 சதவீதத்தை வளைகுடா நாடுகளே கூட்டாக வழங்குகின்றன.
மிக முக்கியமாக, நமது உரத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுத் (LNG) தேவையில் 50% இப்பகுதியில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. யூரியா உற்பத்திக்கான முதன்மை மூலப்பொருள் (Feedstock) இந்த இயற்கை எரிவாயு என்பதால், வளைகுடாப் பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு சிறிய இடையூறும் இந்திய விவசாயத் துறைக்கு நேரடியாக வலுவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
நேரடிப் பாதிப்புகள்
எரிவாயு விநியோகத்தில் அண்மையில் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, நாளொன்றுக்குச் சராசரியாக 80,000 டன்னாக இருந்த உள்நாட்டு யூரியா உற்பத்தி, திடீரென 30,000 முதல் 35,000 டன் வரை சரிந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டுத் தினசரி உற்பத்தியை 67,000 டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும், இந்த உற்பத்தி மீட்புப் பணி என்பது அரசுக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏனெனில், உள்நாட்டு உற்பத்தி இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் தற்போது சர்வதேச உடனடிச் சந்தையில் (Spot Market) மிக அதிக விலை கொடுத்து எரிவாயுவை வாங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.