

எட்டுப் போர்களை நிறுத்தியதாக அடிக்கடி பெருமிதப்படுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அண்மையில் அவர் ஈரான் சென்றிருந்தபோது, “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்னிடம் ‘அஸர்பைஜானுக்கும் அர்மீனியாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளாக நான் அதற்கு முயன்று வருகிறேன்’ என்றார். நான் அந்தப் போரை ஒரே நாளில் நிறுத்தினேன். அதே போலத்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்தினேன்” என்று பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்தப் போர் நிறுத்தங்களுக்கான பிரம்மாஸ்திரமாக அவர் குறிப்பிடுவது ‘வணிக வரி அதிகரிப்பு’. ‘சொன்னதைக் கேட்காவிட்டால் அமெரிக்காவுடனான வணிகத்தை நிறுத்திவிடுவோம்.
அமெரிக்காவுக்கான உங்கள் ஏற்றுமதிப் பொருள்கள் மீதான வரியைத் தாறுமாறாக உயர்த்துவோம்’ என்பதுதான் இவரது தாரக மந்திரம்! அவர் கூறுவதில் உண்மையின் சதவீதம் எவ்வளவு என்பது ஒருபுறம் இருக்கட்டும். வணிகம் என்கிற மந்திரக்கோலைக் கொண்டு கடந்த காலத்தில் போர்கள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றனவா அல்லது நிறுத்தப்பட்டுள்ளனவா என்பதைப் பார்ப்போம்.
எதிரிகளும் வியூகங்களும்: வணிகக் காரணங்கள் போரின் தன்மையை ஓரளவு மாற்றியமைத்திருக்கின்றன என்பது உண்மை. இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸும் ஜெர்மனியும் தீவிர எதிரிகளாக விளங்கின. ஆனால், ஐரோப்பிய கரி - எஃகு சமூக அமைப்பு (European Coal and Steel Community) 1951இல் உருவான பிறகு மாற்றம் நேர்ந்தது. இது போர் நடத்தத் தேவைப்படும் பொருள்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, மீண்டும் போர் ஏற்படாமல் தடுக்க முயன்றது. இந்த அமைப்பு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக வழிவகுத்தது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜெர்மனியும் பிரான்ஸும் ஒன்றோடொன்று போர் புரிவதில்லை. சொல்லப்போனால் இப்போது சந்தை, நாணயம் ஆகிய அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பொதுவாக இருப்பதால், போர் தொடங்கினால் அது தங்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் வேறுபாடுகளைப் பெரிய அளவில் வெளிக்காட்டிக்கொள்வதில்லை தென் ஆப்ரிக்காவில் இனவெறி நீண்ட காலமாகத் தலைவிரித்தாடியது.