

முன்னணி ஏஐ நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக், ஏஐ ஆக்கங்களை அடையாளம் காணும் வகையில் ‘வாட்டர்மார்க்’ (Water Mark) என்னும் அடையாளக் குறியை அவை கொண்டிருக்கும் என அறிவித்திருப்பது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இந்த வாட்டர்மார்க் கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும் என்றும், ஏஐ ஆக்கங்களின் வெளிப்பாடு அல்லது தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஒளிப்படங்கள் உள்ளிட்டவற்றில் வாட்டர்மார்க் இருப்பதுபோல, இனி ஆந்த்ரோபிக்கின் கிளாடு உருவாக்கித்தரும் ஆக்கங்களிலும், கண்ணுக்குத் தெரியாத அடையாளக் குறி இடம்பெற்றிருக்கும்.
ஏஐ சாட்பாட்களைக் கொண்டு உருவாக்கப்படும் டிஜிட்டல் பெருங்குப்பை இணையத்தில் குவிவதால் ஏற்படும் பலவிதப் பிரச்சினைகள் பற்றிப் பலரும் கவலையுடன் பேசிவரும் நிலையில், ஏஐ ஆக்கங்கள் எனக் கண்டறியப்படுவதற்கான வாட்டர்மார்க் அறிமுகம் வரவேற்கத்தக்கது எனப் பலரும் கருதுகின்றனர்.
இது ஏஐ பெருங்குப்பை உருவாக்கத்தைத் தடுக்கும் என்றோ குறைக்கும் என்றோ சொல்ல முடியாவிட்டாலும், ஏஐ ஆக்கம் எனத் தெளிவாகக் கண்டறிவதற்கான வழி அதன் உருவாக்கப் பிரதியிலேயே இருப்பது நல்ல முன்னேற்றம்தான்.
முழுமையானதா?
ஐரோப்பிய ஒன்றியப் பகுதிகளில் சேவை அளிக்க, ஏஐ சேவைகள் வாட்டர்மார்க் வசதியைக் கொண்டிருக்க வேண்டும் எனப் புதிய நெறிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே ஆந்த்ரோபிக் நிறுவனம் வாட்டர்மார்க் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஐரோப்பாவைத் தாண்டி உலகம் முழுவதும் இது அறிமுகம் ஆகும் எனத் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்தக் கண்டறிதல் வசதி இறுதியானது என்றோ முழுமையானது என்றோ கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இது ஓர் அடையாளம் என்கிற அளவில் இருக்கும். மற்றபடி இதை மட்டுமே வைத்து, ஓர் ஆக்கம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதைத் தீர்மானிக்க முடியாது எனக் கூறியுள்ளது.