

‘எத்தியோப்பியாவில் ஒரு எரிமலை வெடித்தது’ என்பதை மட்டும் அறிய நேர்ந்திருந்தால் நம்மில் பலருக்கும் அது ஒரு பெரிய செய்தியே அல்ல. எங்கோ ஓர் ஆப்ரிக்க நாட்டில் ஏதோ ஒரு எரிமலை வெடிப்பு, அவ்வளவுதானே. ஆனால் அந்த எரிமலை வெடிப்பு இந்தியாவையும் பாதிக்கத் தொடங்கியதுதான் பிரச்சினை. முதலில் குஜராத்தில் நுழைந்த எரிமலைச் சாம்பல் பின்னர் கிழக்கு, வடகிழக்காக நகர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரம், டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்குப் பரவியது.
இது எப்படி? ‘சிறிய மாற்றம்கூட மிகப்பெரிய (எதிர்பாராத) விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’ என்கிறது அறிவியல். இதை கேயாஸ் கோட்பாடு (Chaos theory) என்பார்கள். முக்கியச் சாலையில் ஏற்படும் ஒரு சிறிய விபத்து, அடுத்த சில மணி நேரத்தில் நகரின் போக்குவரத்தையே நிறுத்த வைத்துவிடலாம். ஒரு சிறிய தீப்பொறி பெரிய காட்டுத்தீ ஆகலாம். எரிமலை விளைவும் அப்படியானதுதான்.
எத்தியோப்பியாவின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 12,000 ஆண்டுகள் அமைதியாக இருந்த எரிமலைதான் ஹெய்லி குபி. தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து ஏறக்குறைய 800 கிலோமீட்டர் தொலைவில் அஃபார் பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை சமீபத்தில் வெடித்தது. பல மணி நேரத்துக்கு வெடித்துச் சிதறியது. இதனால் வானில் சுமார் 14 கிலோமீட்டர் உயரத்துக்குச் சாம்பலும் புகையும் சூழ்ந்தன. சாம்பல் சூழ்ந்த மேகங்கள் ஏமன், ஓமன், இந்தியா, வடக்கு பாகிஸ்தான் பகுதியைச் சூழ்ந்துள்ளன. இதனால் மத்திய கிழக்குப் பாதையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் முடக்கம் ஏன்? - எரிமலை வெடிப்புப் பகுதிகளில் விமான சேவைகள் தற்காலிகமாகவாவது நிறுத்திவைக்கப்படுவது இயல்பு. காரணம், மேகங்களைத் தாண்டி உயரமாகப் பறக்கக்கூடியவை விமானங்கள். எரிமலை வெடிப்புக்குப் பிறகு அதன் சாம்பல் அந்த மேகங்களில் படர்ந்திருக்கும். கண்ணாடித் துகள், உலோகத் துகள் போன்ற கடினமான பொருள்கள்கூட இதில் கலந்திருக்கும். ஜெட் விமானத்தின் இன்ஜினுக்குள் இந்தச் சாம்பல் சென்றால் அது அங்கு உருகி மீண்டும் கல்லாக மாறி, இன்ஜினை முடக்கிவிடும் சாத்தியம் உண்டு.