

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்கக் கடந்த 2020 செப்டம்பர் 23 அன்று அரசாணை (எண் 448) தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் தமிழகமெங்கும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காகத் தொழிலாளர் நலத் துறை எடுத்த முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. அதேநேரத்தில், இதில் உள்ள சவால்களை வெளிப்படையாகப் பேசுவதும், அவற்றுக்கான தீர்வுகளை விவாதிப்பதும் அவசியம் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 1976இல் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது ஒரு மைல்கல்.
50 ஆண்டுகள் கடந்தும், இன்றும் இந்த முறை பரவலாக இருக்கிறது என்பதுதான் வேதனை. செங்கல் சூளை, கல்குவாரி, அரிசி ஆலை, பஞ்சாலைகள், உப்பளம், பட்டு நெய்தல், விவசாயம், வீட்டுவேலை போன்ற பல்வேறு தொழில்களிலும் கொத்தடிமை முறை இருந்துவருகிறது என்பதே யதார்த்த நிலை.
வரையறையும் தரவுகளும்: 1976 கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் 2(g) பிரிவின்படி, கடன் அல்லது கடமைக்காக, ஒரு நபர் தன்னுடைய சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை அல்லது சுதந்திரமாக விருப்பப்பட்ட வேலையைச் செய்யும் உரிமை அல்லது விருப்பப்பட்ட இடத்துக்குச் செல்லும் உரிமை அல்லது தான் உற்பத்தி செய்த பொருளைச் சந்தை விலைக்கு விற்பனை செய்யும் உரிமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இழந்தால் அவர் கொத்தடிமைத் தொழிலாளர் என்று கருதப்படுகிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, இந்தியாவில் 1,246 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 1,365 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதில் 98 சதவீத வழக்குகள் வெறும் ஐந்து மாநிலங்களில் (உத்தரப் பிரதேசம் 1,121, கர்நாடகம் 33, தமிழ்நாடு 28, ஜார்க்கண்ட் 17, குஜராத் 15) பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 16 மாநிலங்கள், 8 ஒன்றியப் பிரதேசங்களில் ஒரு வழக்குகூடப் பதியப்படவில்லை. இது சட்ட அமலாக்கத்தில் மிகப் பெரிய இடைவெளி உள்ளதை உணர்த்துகிறது.