

மனித இதயம் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை துடித்து, உடல் முழுவதிலும் ரத்தத்தைச் செலுத்துகிறது. ஒவ்வொரு விநாடியும் ரத்தச் சுழற்சியில் பயணிக்கும் புற்றுநோய் செல்கள் உள்பட பல உள்கூறுகளையும் அது உடலெங்கும் எடுத்துச் செல்கிறது.
ஆனாலும், இந்தப் பயணத்தில் இடம்பெறும் புற்றுநோய் செல்கள் உடலில் மற்ற இடங்களில் புகுந்து புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்குவதுபோல, இதயத்தில் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை.
புள்ளிவிவரப்படி, இதயத்தில் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகபட்சம் 0.3% மட்டுமே. அதிலும் இதயத் தசைகளில் இது ஏற்படுவதில்லை. இதய ரத்த நாளங்களில் மட்டுமே புற்றுநோய் (Angiosarcoma) ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம்? பல தசாப்தங்களாக, இதய செல்களின் உயிரியல், உடலியல், மரபியல், நோய் எதிர்ப்பாற்றல் கண்காணிப்பு போன்ற பல செயல்பாடுகள் மூலம் இந்தக் கேள்விக்கு விடை காண முடியவில்லை, தற்போது ‘சயின்ஸ்’ இதழில் வெளிவந்துள்ள ஓர் ஆராய்ச்சி இந்தப் புதிரை விடுவித்துள்ளது.
‘லப்... டப்’, ‘லப்... டப்’ எனத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இதயம் துடிப்பதற்கு உதவும் விசைதான் இதயத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆயுதம் என்கிறது இந்த ஆராய்ச்சி.
துடிப்புக் கொடுத்த துப்பு
இத்தாலியின் டிரிஸ்டே நகரில் உள்ள சர்வதேச மரபணுப் பொறியியல் – உயிரித் தொழில்நுட்பத் துறையின் முனைவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியாளர் ஜியுலியோ சி - உச்சி (Giulio Ci-ucci) இந்த ஆராய்ச்சி குறித்துப் பேசும்போது, “எங்கள் ஆராய்ச்சியில் இயல்பாகத் துடிக்கும் இதயங்களில் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அரிதினும் அரிதாகவே இருந்தது.
ஆனால், இதயத் துடிப்புக்கு உதவும் செயற்கைக் கருவிகள் (Heart-assist devices) பொருத்தப்பட்ட பயனாளர்களின் இதயத் தசை செல்கள் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு இடம் கொடுப்பதைக் காண முடிந்தது” என்றார்.