

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 45.6 கோடி. இது இந்திய மக்கள்தொகையில் 37 சதவீதம். 2027இல் நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதுபோல, தங்களின் சொந்த மாநிலத்திலிருந்து வேலைவாய்ப்புகளுக்காக இந்தத் தொழிலாளர்களின் இடப்பெயர்வு தொடர்கிறது.
இந்த எண்ணிக்கையில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் உண்டு. இவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அரசமைப்புச் சட்டம் பிரிவு 326 உறுதிப்படுத்தியிருக்கும்போதும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இவர்களில் 3 கோடி பேர் வாக்களிக்க இயலவில்லை.
வாக்களிப்பதற்காகத் தங்களின் சொந்த மாநிலத்துக்குச் சென்றுவருவது எல்லாருக்கும் சாத்தியமாகிவிடுவதில்லை. விடுமுறை கிடைப்பதில் உள்ள சிரமம், கூடுதல் பயணச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வாக்களிக்க முடியாமல் பலர் தேங்கிவிடுகிறார்கள். ஒரு தேர்தலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் விலகியிருப்பது ஆரோக்கியமான நடைமுறையாக இருக்க முடியாது. இவர்களை உள்ளடக்கிய தேர்தல் அவசியம்.
உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 பிரிவு 19, 20இன்கீழ் சாதாரணமாக வாழும் இடம் (Ordinarily Residing) என்பது வாக்களிக்கும் இடம். இதன் பொருள் புலம்பெயர்ந்து வந்து வசிக்கும் மாநிலத்தில் வாக்கு பெறுவது என்பது அல்ல. ஒருவர் தனது சொந்த மாநிலத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தற்போது அவர் தங்கி உள்ள மாநிலத்தில் சொத்து வாங்கியிருந்தால்கூட அவருக்கு வாக்களிக்கும் உரிமை அந்த மாநிலத்தில் எளிமையாகக் கிடைத்துவிடாது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1999 ஆண்டு ‘இந்தியத் தேர்தல் ஆணையம் எதிர் டாக்டர் மன்மோகன் சிங்’ வழக்கில் புலம்பெயர்ந்த மாநிலத்தில் வாக்குரிமை பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. டெல்லியை வசிப்பிடமாகக் கொண்ட மன்மோகன் சிங், அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், டெல்லியிலிருந்த தனது வாக்கை நீக்கி அசாம் மாநிலத்தில் தேர்தல் படிவம் 6 இன் மூலம் வாக்காளர் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.