

ஐநா பொது மன்றத்தின் (UNGA) மாநாடு செப்டம்பர் கடைசி வாரத்தில் நியூயார்க்கில் நடைபெற்றது. அரங்கில் பன்னாட்டுத் தலைவர்கள் உரையாற்றினர். கூடவே, பல சந்திப்புகளும் உரையாடல்களும் நடைபெற்றன. இதில் முக்கியமானது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை. இது நேரடியாக அல்ல, கத்தார் மூலமாக நடைபெற்றது.
செப்டம்பர் 25 அன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் நீரிணையைத் திறந்துவிடத் தாங்கள் ஆயத்தமாக இருப்பதாக அறிவித்தார். சில நிபந்தனைகளையும் விதித்தார். இந்த நிபந்தனைகள், ஏற்கெனவே அமெரிக்கா ஒப்புக்கொண்டவைதாம். பேச்சுவார்த்தைக்கு இடையில், அதுவும் நியூயார்க்கில் அறிவிக்கப்பட்டதால், இது அமெரிக்காவுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்றே பலரும் கருதினர். ஆனால் அடுத்த நாள், இந்தச் சமரசத்துக்கு நாங்கள் ஒப்பவில்லை என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு ஈரான் எதிர்வினை ஆற்றியது.
தங்களது முன்மொழிவுக்கு கத்தார் வழியாக முறையான பதில் வரும்வரை ஈரான் காத்திருக்கும் என்றும், அமெரிக்கா ஓர் உடன்பாட்டுக்கு வரவில்லை எனில், ஈரானின் எதிர்த் தாக்குதல் தீவிரமடையும் என்றும் அந்த எதிர்வினை இரண்டு தளங்களில் இருந்தது. இந்த அறிவிப்புகளை எப்படிப் புரிந்து கொள்வது?