என்ன கிடைக்கும் இந்தியாவுக்கு? | என்விஎஸ்-03

இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டி அமைப்பான ‘நாவிக்’ புதுவாழ்வு பெறுகிறது
என்ன கிடைக்கும் இந்தியாவுக்கு? | என்விஎஸ்-03
Updated on: 
3 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-18 (GSLV-F18) ராக்கெட் மூலம் ‘என்விஎஸ்-03’ (NVS-03) வழிகாட்டிச் செயற்கைக்கோளை அக்டோபர் 30, 2026 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கிறது.

இந்தச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டதால், இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டி அமைப்பான ‘நாவிக்’ புதுவாழ்வு பெறவுள்ளது. நாவிக் செயல்படத் தொடங்குவது இந்தியாவின் பாதுகாப்புத் தேவைக்கு மிக முக்கியம்.

பலம் பெறும் நாவிக்

நாவிக் (NavIC) என்பது ‘Navigation with Indian Constellation’ என்பதன் சுருக்கம். இது அமெரிக்காவின் ஜிபிஎஸ் (GPS) போன்ற இந்தியாவின் பிராந்திய வழிகாட்டி அமைப்பு. இது இந்தியாவிலும் அதன் எல்லைகளைச் சுற்றிலும் ஏறக்குறைய 1,500 கிலோமீட்டர்வரை சேவைகளை வழங்க முடியும்.

உங்கள் கைப்பேசி அல்லது கார் இருப்பிடத்தைக் கணக்கிட, குறைந்தது நான்கு செயற்கைக்கோள்களின் சிக்னல்கள் தேவை: மூன்று உங்கள் அமைவிடத்தை (அட்சரேகை, தீர்க்கரேகை, உயரம்) தீர்மானிக்கின்றன, நான்காவது உங்கள் கருவியின் கடிகாரப் பிழையைச் சரிசெய்யப் பயன்படுகிறது.

2013 முதல் இந்தியா தொடர்ந்து 11 வழிகாட்டிச் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது; ஆனால், இவற்றில் பொருத்தப்பட்டிருந்த பெரும்பாலான இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு அணுக்கடிகாரங்கள் பழுதடைந்துவிட்டன.

மேலும் கடந்த ஆண்டு ஏவப்பட்ட ‘என்விஎஸ்-02’ தோல்வியடைந்துவிட்டதால், குறைந்தபட்சமாகத் தேவைப்படும் நான்கு செயற்கைக்கோள்கள் இல்லாமல் இந்தியாவின் நாவிக் அமைப்பு தள்ளாடிவருகிறது. வெறும் மூன்று செயற்கைக்கோள்களை வைத்து வழித்தட சேவையை வழங்க முடியாது; எனவே, வெறும் நேர சேவை மட்டுமே செயல்படுகிறது.

என்விஎஸ்-03 என்பது இரண்டாம் தலைமுறை நாவிக் செயற்கைக்கோள்களின் வரிசையில் மூன்றாவது செயற்கைக்கோள். அது வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நுழைந்து செயல்படத் தொடங்கியதும், நாவிக் அமைப்பில் நான்கு ‘செயல்படும் செயற்கைக்கோள்கள்’ இருக்கும்.

இதன் தொடர்ச்சியாக ‘என்விஎஸ்-03’ செயல்படத் தொடங்கியதும் நாவிக் மூலம் வழித்தட சேவைகளைப் பெற முடியும். இதன் மூலம் ஜிபிஎஸ் போல உலகெங்கும் சேவைகளைப் பெற முடியாது என்பது உண்மைதான். எனினும் இந்தியாவிலும் சுற்றியுள்ள பிராந்தியத்திலும் அடிப்படை வழிகாட்டித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

Loading content, please wait...

X