பெண்களுக்கு எதிராக ஆண்களால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அனைத்துக்கும் பெண்களே காரணம் என்று சொல்வது நம் மரபிலேயே ஊறிப்போய்க் கிடக்கிறது. கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சில பிரபலங்கள் உட்படப் பலர் வெளிப்படுத்திய கருத்துகள் அதைத்தான் அழுத்தமாக உணர்த்தின.
‘நீங்கள் ஆடை அணிந்த விதம் தவறு, நீங்கள் அந்த நேரத்தில் வெளியே சென்றது தவறு, நீங்கள் வேலைக்குச் சென்றது தவறு, நீங்கள் வீட்டில் தனியாக இருந்தது தவறு, நீங்கள் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் இயங்கியது தவறு...’ இப்படி நீளும் பட்டியல் இறுதியாக ‘நீங்கள் பெண்ணாகப் பிறந்ததே தவறு’ என்றுதான் முடியும்போல.