

விவசாயத்தில் ஓர் அணுகுமுறை மாற்றம், புதிய பாதை தேவைப்படுகிறது. குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழகத்தின் புதிய அரசு அதை முன்னெடுக்க வேண்டும் என்கிற குரல்கள் எழுந்திருக்கின்றன. விவசாயிகள் விரும்பும் மாற்றங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.
பட்ஜெட்டில் முக்கியத்துவம்
இயற்கை வேளாண் முறைகளைச் சிறப்பாகப் பின்பற்றிய வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு. ஆனால், சரியான கொள்கை வழிகாட்டுதல், தொடர்ந்த வேலைத்திட்டங்கள் இல்லாததால் இதில் சுணக்கம் தென்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்தை ஆதரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி தோராயமாக ரூ.154 கோடி மட்டுமே.
இது மொத்த வேளாண் பட்ஜெட்டில் 0.03% (2024இல் இது 0.05%க்கும் குறைவாகவே இருந்தது). இயற்கை விவசாயத்தால் பெறக்கூடிய நல்ல ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வேளாண் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு வேளாண் பட்ஜெட்டில் 30% இயற்கை வேளாண்மைக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அத்துடன் விவசாயிகள், மகளிர் குழுக்களால் உள்ளூர் இயற்கை இடுபொருள் கடைகள், பாரம்பரிய, (நேரடி-மகரந்தச் சேர்க்கை) விதைகளுக்கான சமூக விதை மையங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் வேண்டும். மண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதி உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், இயற்கை விவசாயிகளுக்குச் சுற்றுச்சூழல் சேவைக்கான ஊக்கத்தொகை வழங்கலாம்.
மூத்த இயற்கை விவசாயிகள், நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, மாநிலம் தழுவிய இயற்கை வேளாண் பயிற்சிகள் அளிக்கலாம். நேரடிக் கொள்முதல் மையங்கள் மூலம் பள்ளிகளுக்கான காலை / மதிய உணவுத் திட்டம், மகப்பேறு பலன்கள் போன்றவற்றுக்காக அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் உணவில் குறைந்தது 30% இயற்கை உணவு கிடைக்க வழிசெய்யலாம். இயற்கை வேளாண்மை தொடர்பான கல்வித் திட்டங்கள் அவசியம். வேளாண்மைத் துறையும் பல்கலைக்கழகங்களும் உள்ளூர் நிலைமைக்கு ஏற்ற மரபு விதைகளை ஊக்குவித்துப் பாதுகாக்க வேண்டும்.