

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்பதற்கான போராட்டம் 50 ஆண்டுகள் தொடர்ந்ததை நாம் அறிவோம். வி.பி.சிங்கின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்கெடுப்பு நடத்தி ஒருமித்த கருத்து எட்டப்பட்டது; அதன் பின்னர் உரிய சட்ட அங்கீகாரத்துடன் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
இன்றைய நிலை: நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை 2007இல் வெளியிட்ட பிறகு தமிழகமும் கர்நாடகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மேலாதிக்கம் செலுத்த இயலாது. எனவே, எதுவாக இருந்தாலும் நடுவர் மன்றத்தையே அணுக வேண்டும்’ என உத்தரவிட்டனர்.