

அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர், சிவகாசி பள்ளி ஆய்வுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த மாணவியிடம் எழுப்பிய கேள்வி குறித்துப் பெரிய அளவில் விவாதம் எழுந்தது; அந்தக் கேள்வி அரசுப் பள்ளி மாணவியரின் கற்றல் அடைவோடு தொடர்புடையதாக ஆக்கப்பட்டது.
மாணவியர் ஆங்கிலத்தில் எவ்விதம் பேசுகிறார்கள் என்பதைச் சோதிக்கும் பொருட்டு, இந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்கிறார் எனக் கருதலாம். மாணவர்தம் கற்றல் திறன் அமைச்சருக்குத் திருப்தி அளிக்கவில்லை.
இது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. மாணவியரை கேமரா முன் நிறுத்திக் கேள்வி கேட்டு, அவர்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவது நவீனக் கற்றல் முறைக்கு எதிரானது எனப் பலர் விமர்சித்தனர். ஒருவகையில் இந்த உரையாடல் நல்லது. இது ஒரு சமூகம் விழிப்புடன் இருப்பதன் அடையாளம்.
மொழி இலக்கணம்
இரண்டாவது பிரச்சினை, மொழி தொடர்பானது. இந்தக் கேள்வி இலக்கணப்படி சரியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் பொருள் குற்றம் இருக்கிறது. ‘வாட்’ என்னும் கேள்விக்கு அஃறிணைப் பொருள்களே பதிலாக வரும். ‘Who is your father?’ என்று கேள்வியைத் திரித்தால், அதை ‘உன் அப்பா யார்?’ என்று தமிழில் மொழிபெயர்க்கலாம்.
அதற்கு ‘என் அப்பா ஒரு தமிழர்’ என்றோ, ‘என் அப்பா ஒரு மலையாளி’ என்றோ, எப்படி வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம். அவை இலக்கணப்படி சரியானவை. ஆனால் ‘வாட் இஸ் யுவர் பாதர்?’ என்னும் கேள்வியை, இந்தியாவில் ஆங்கிலம் பேசும் சிலர், ‘உன் அப்பாவின் தொழில் என்ன?’ என்கிற பொருளில் கேட்கிறார்கள்.
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தக் கேள்விக்கு அந்த அர்த்தம் வராது. இந்தக் கேள்வியை அங்கு உள்ளவர்களிடம் போய்க் கேட்டால், அதற்கு அமைச்சர் எதிர்பார்த்த பதில் கிடைக்காது. அப்பாவின் தொழிலை அறிய வேண்டுமானால், அமைச்சரின் கேள்வியைத் தொடர்ந்து சிவகாசி ஆசிரியர் தனது மாணவியிடம் கேட்டதுபோல், ‘What is your father’s profession?’ என்றுதான் கேட்பார்கள். அதுவே சரியானது.