

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரிடர், இயற்கையின் சீற்றத்தைப் பற்றிய செய்தி மட்டுமல்ல; இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு முக்கியமான பொருளாதார எச்சரிக்கையும்கூட.
நிலநடுக்கம், வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஒரு நாட்டின் பொதுநிதி, உள்கட்டமைப்பு வசதிகள், குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு, முதலீடு, எதிர்கால வளர்ச்சி ஆகிய அனைத்திலும் குறுகிய கால / நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியாக மாறுகின்றன.
இதையொட்டி, இந்தியா இன்று எதிர்கொள்ள வேண்டிய அடிப்படைச் சவால்கள் பற்றிச் சிந்திப்பது அவசியம். பேரிடர் ஏற்பட்ட பிறகு செலவிடுவது சரியானதா, பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே பாதுகாப்புக்காக முதலீடு செய்வது சரியானதா என்கிற கேள்வி மிகவும் முக்கியமானது.
பொருளியல் மொழியில் கூறினால், இந்த முன்னெச்சரிக்கை முதலீட்டுக்கும் பேரிடருக்குப் பிந்தைய மீட்புச் செலவுக்கும் இடையிலான தெரிவு எனக் குறிப்பிடலாம். பேரிடர் முன்னெச்சரிக் கைக்காக அரசு செய்ய வேண்டிய செலவுகள் குறைவானவை அல்ல.
அபாய வரைபடம் தயாரித்தல், செயற்கைக்கோள் கண்காணிப்பு, பனிப்பாறை ஏரிகளைக் கண்காணித்தல், துல்லியமான வானிலை முன்னறிவிப்பு, ஆற்று நீர்மட்ட எச்சரிக்கை அமைப்பு, பாதுகாப்பான வெளியேற்றப் பாதைகள், அவசரகாலத் தங்குமிடங்கள், தகவல் தொடர்பு வசதிகள் எனப் பல துறைகளில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். இந்தச் செலவுகள் அனைத்தும் எதிர்கால இழப்புகளைத் தவிர்க்கும் அவசியமான முதலீடுகள் என்று கருத வேண்டும்.
ஏனெனில், பேரிடர் ஏற்பட்ட பிறகு ஏற்படும் செலவு இதைவிடப் பல மடங்கு அதிகம். ஈடுசெய்ய முடியாத இழப்புகள். மிக முக்கியமாகச் சாலைகள், பாலங்கள், மின்நிலையங்கள், நீர்வழங்கல் அமைப்புகள் ஆகியவற்றை மீண்டும் கட்ட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். வீடுகளை மறுகட்டமைக்க வேண்டும். விவசாய இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை இழந்த குடும்பங்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். குழந்தைகளின் கல்விப் பாதிப்பு முதல் உள்ளூர்ப் பொருளாதாரத்தின் நீண்ட காலச் சரிவுவரை பல மறைமுக இழப்புகளும் ஏற்படுகின்றன. அவற்றை ஈடுகட்ட நிறைய முதலீடு செய்ய வேண்டும்.