

பெங்களூரு மாநகரின் நீர்த் தேவை அதிகரித்து வருவதை முதன்மைக் காரணமாகக் கூறி, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்கிற இடத்தில் ஏறக்குறைய 67.16 டிஎம்சி நீர்க் கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மேட்டூர் அணையின் கொள்ளளவில் ஏறக்குறைய 72 சதவீத அளவில் உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த அணை, ஒருவேளை கட்டப்பட்டால் என்னென்ன விளைவுகள் நேரும்?
நீர்ப் பங்கீட்டு வரலாறு
காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையானது மதராஸ்-மைசூர் மாகாணங்களுக்கு இடையே 1892இல் தொடங்கி இன்றுவரை தீர்க்கப்படாத ஒன்றாகத் தொடர்ந்துவருகிறது. 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவந்த காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில், ஒருவழியாக உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2018 பிப்ரவரி 16இல் அறிவித்தது.
தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகச் சொல்லி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 2007 பிப்ரவரி 5இல் தமிழகத்துக்கு வழங்கிய 192 டிஎம்சி நீரின் அளவிலிருந்து 14.75 டிஎம்சியைக் குறைத்து, கர்நாடகம் 177.25 டிஎம்சி நீரைத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் எனத் தனது தீர்ப்பில் கூறியது.
மேலும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டது. வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால் மழையின் அளவு, நீர்த் தேவை உள்ளிட்டவை மாறிவரும் சூழ்நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு, அப்போதே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
காவிரி நதிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சில நல்ல கட்டளைகளையும் உச்ச நீதிமன்றம் அப்போது பிறப்பித்தது. பல மாநிலங்களின் விவசாயம், குடிநீர்த் தேவையைத் தொடர்ந்து பூர்த்திசெய்துவருவதால், காவிரி ஆறு ஒரு தேசியச் சொத்து என்றும், ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குச் சொந்தமானது இல்லை எனவும் தீர்ப்பளித்தது.
இதன்படி, தமிழகத்தின் அனுமதியின்றிக் காவிரியின் குறுக்கே இனிமேல் புதிய அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது. நீர்ப் பங்கீட்டு முறையைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக, மத்திய அரசு அடுத்த ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.