

சிறு, குறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி வளர்ச்சி, உள்ளூர் வளங்களின் பயன் ஆகியவற்றில் இத்துறையின் பங்கு மறுக்க முடியாதது. எம்.எஸ்.எம்.இ. துறையை வலுப்படுத்தும் துணிச்சலான, நடைமுறைசார்ந்த கொள்கைகள் அவசியம் தேவைப்படுகின்றன.
தனித் துறை அவசியம்
முதலில், ‘நுண் - கிக் தொழில்முனைவோர்’ (Micro & Gig Entrepreneurs) என்கிற பெயரில் தனித் துறை ஒன்றைத் தொடங்குவது காலத்துக்கு ஏற்ற முன்னோடியான முடிவாக இருக்கும்.
இன்று பல இளைஞர்கள் இணையவழித் தொழிலில் (Gig economy) ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை முறையான தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் பதிவு, நிதி, பயிற்சி, சந்தை இணைப்பு போன்ற அனைத்து ஆதரவுச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் தனித் துறை அவசியம்.
அடுத்து, மாநிலம் முழுவதும் எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சியை அளவிடக்கூடிய இலக்குடன் முன்னெடுக்க வேண்டும். 50 லட்சம் என்னும் எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்களின் தற்போதைய எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடியாக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இதற்கான மாவட்டவாரியான செயல் திட்டங்கள், ஊக்கத் திட்டங்கள், கண்காணிப்பு முறை அவசியம். செயல்பாட்டுச் செலவைக் குறைக்கும் (Operating Cost Reduction) திட்டங்கள் மிக அவசியம்.
பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (Production Linked Incentive- PLI) போன்ற திட்டங்களைப் போல, எம்.எஸ்.எம்.இ.களுக்குச் சிறிய அளவிலான திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மின்சாரம், வட்டிச் சலுகை, உற்பத்தி அடிப்படையிலான ஊக்கங்கள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களுக்குத் தொழில் அனுபவம் அளிக்கும் நோக்கில், 10 லட்சம் மாணவர்கள் கட்டாயமாக மூன்று மாதங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வகையிலான திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.