

காலையில் தூங்கி எழுந்தவுடன் திறன்பேசியைப் பார்ப்பது இன்று பழக்கமாகிவிட்டது. பெரும்பாலோர் சமூக ஊடகத்தில் முந்தைய நாள் பதிவிட்ட (Post) ஒளிப்படத்துக்கு எத்தனை விருப்பக்குறிகள் (Likes) வந்துள்ளன என்பதையே முதலில் பார்க்கிறார்கள். எதிர்பார்த்த அளவு விருப்பக்குறி கிடைக்கவில்லை என்றால், சற்றே ஏமாற்றம் அடைகிறார்கள்.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்கள் மனித உறவுகள், அடையாளங்கள், அழகு சார்ந்த பார்வைகள் போன்றவற்றை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. குறிப்பாக, பெண்களின் வாழ்க்கையில் இவற்றின் தாக்கம் ஆழமாக உள்ளது.
விருப்பக்குறிகள் குறைவாக இருப்பது அல்லது கிடைக்காமல்போவதன் காரணமாகப் பெண்கள், ‘நான் அழகாக இல்லை’, ‘நான் சிறந்தவள் அல்ல’ என்றெல்லாம் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
வடிகட்டிகளின் உலகம்
சமூக வலைத்தளங்கள் ஒரு புதிய வகையான கண்ணாடியை மனித சமுதாயத்துக்குக் கொண்டுவந்துள்ளன. முன்பு கண்ணாடியில் நம்மை மட்டுமே பார்த்தோம். இன்று உலகம் முழுவதும் உள்ள பெண்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒப்பிடுவது மனித இயல்பு என்றாலும், இவ்வளவு வேகமாகவும் தீவிரமாகவும் ஒப்பிடும் பண்பாடு இதற்கு முன் இருந்ததில்லை. இன்று சமூக ஊடகங்களில் காணப்படும் பல தோற்றங்கள் யதார்த்தமானவை அல்ல.
அவை மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பல வகையான வடிகட்டிகள் (Filters), மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் செயலிகள் (Apps) உருவாக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்பங்கள் ஒளிப்படங்கள், சுயமி (Selfie) ஆகியவற்றின் மீது பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
‘அழகு’ என்பது இயல்பான தோற்றத்தைவிட சமூக அங்கீகாரம் பெறக்கூடிய, கண்ணுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும் ஒரு வடிவமாக மாற்றப்படக்கூடியது என்பதே இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களின் அடிப்படை எண்ணம்.
இவற்றின் வழியாக, தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை மேலும் அழகாக மாற்றலாம் என்கிற நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் இயல்பான தோற்றமே ஒரு குறைபாடு என்கிற மறைமுக எண்ணம் மனித மனதில் விதைக்கப்படுகிறது.
சமச்சீரான முக அமைப்பு, பளபளப்பான தோல் போன்றவை உலகளாவிய அழகுக் கோட்பாடுகளாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், அவை மனிதர்களின் தனித்துவத்தையும் பல்வகைத் தன்மையையும் புறக்கணிக்கின்றன.
தொழில்நுட்பம் வழிநடத்தும் அழகு சார்ந்த பார்வைகள் மனிதர்களின் இயல்பான பல்வகைத் தன்மையைக் குறைத்து, ஒரே மாதிரியான ‘நேர்த்தியான முகம்’ என்கிற கருத்தை உருவாக்குகின்றன.