

மேற்காசியப் போர்ப் பதற்றம் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டன. அங்கு பேசப்படாத முக்கிய விஷயங்கள் இரண்டு உண்டு. அவை மருந்துத் தட்டுப்பாடும் விலை உயர்வும்.
உலகின் மருந்தகம்
மருந்துத் தயாரிப்பில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிற நாடு இந்தியா. பொதுப்பெயர் மருந்துகளை (Generic medicines) 200 நாடுகளுக்கும் மேல் மொத்த ஏற்றுமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
உலகளாவிய மருந்துத் தேவையைப் பூர்த்திசெய்யும் நாடு என்பதால் இந்தியாவை ‘உலகின் மருந்தகம்’ (Pharmacy of the world) என்றழைக்கின்றனர். ஆனால், மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான 85%க்கும் அதிகமான மூலப்பொருள்களுக்கு (API – Active Pharmaceutical Ingredients) சீனா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் போன்ற வெளிநாடுகளையே இந்தியா இன்றைக்கும் நம்பியிருக்கிறது.
மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை மட்டுமல்லாமல், முக்கியத் தொடக்கப் பொருள்களையும் (KSM – Key Starting Materials) வெளிநாடுகள்தான் வழங்க வேண்டும்.
இவற்றின் இறக்குமதிக்குத் தடை ஏற்படுமானால், மொத்த இந்திய மருந்துத் தயாரிப்புத் துறையும் முடங்கிவிடும். மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துவிடும். போர் இன்னும் நீடிக்குமானால் இந்த நிலைமை இந்தியாவில் சில வாரங்களிலேயே வந்துவிடும்.
பெட்ரோலியப் பொருள்கள்
பெரும்பாலான நவீன மருந்துகளின் தயாரிப்புக்கு பெட்ரோலியப் பொருள்கள்தான் (Petrochemicals) ஆதாரம். எடுத்துக்காட்டுக்கு, காய்ச்சலுக்குத் தரப்படுகிற பாராசிட்டமால்.
இதில் பாராசிட்டமால் மருந்து மட்டுமே வேதிப்பொருள் இல்லை. இந்த மருந்தின் வேதிப்பண்பை நிலைநிறுத்துவதற்கு லேக்டோஸ், கிளிசரின், புரோபைலின் கிளைக்கால் போன்ற சில வேதிக்கரைப்பான்கள் தேவைப்படுகின்றன.