

தாவரங்களின் இனப்பெருக்கம், காடுகளின் வளர்ச்சி உள்பட இயற்கைக்கும் உயிரிகளுக்கும் ஏராளமான நன்மைகளைப் பறவைகள் செய்கின்றன. உலகில் உள்ள மரங்கள் ஏதோவொரு காலத்தில் நாம் அறியாத பறவைகளால் தோன்றின எனக் கருதலாம். பறவைகள் குறித்து மனிதர்கள் பதிவுசெய்த தகவல்கள் வியப்பை அளிக்கக்கூடியவை.
தமிழில் ‘பறவைகள்’
சங்க இலக்கியங்கள் பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவையும் பாடுகின்றன. தாவர - விலங்கியல் (flora and fauna) வகைமையில் பறவைகளை ஆராய்வது நவீனக் காலத்தில் தொடங்கியது. பிரிட்டிஷ்-இந்தியாவில் பறவைகளை ஆராய்ந்ததில் ஃபிராங்க்ளின் (1831), சைக்ஸ் (1832), டிக்கெல் (1833) போன்றோர் முதன்மையானவர்கள்.
மதராஸ் ராணுவத்தின் மருத்துவரான டி.சி.ஜெர்டன், ‘இந்தியப் பறவைகள்’ நூலை 1862இல் வெளியிட்டார். இதைத்தான் மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் கையேடுகளில் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு நெல்சனும் (1868) லெவிஸ்மூரும் (1878) மேற்கோள்காட்டினர்.
பறவைகளைப் பற்றி எழுதுவது தமிழுக்கும் நகர்ந்தது. ‘ஜநா நந்திநி’ பிப்ரவரி 1891 இதழில் ‘பறவைகள்’ என்னும் கட்டுரை வெளியானது. ‘விவேக சிந்தாமணி’யின் 1893 ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் டி.ஆர்.இராமநாதைய்யரின் ‘பறவைகள்’ பிரசுரமானது.
‘விவேகபாநு’, ஜூன் 1904இல் எம்.கோபாலகிருஷ்ணையரின் ‘பரிகஸிக்கும் பறவை’; ‘ஜனவிநோதினி’ 1905இல் ‘அன்னப்பறவை’; ‘சக்கரவர்த்தினி’, ஜூலை 1906இல் ‘கோழியும் அதன் முட்டையும்’; ‘நல்லாசிரியன்’, பிப்ரவரி 1907இல் ‘கழுகு’ எனக் கட்டுரைகள் வெளியாகின.
உலகுக்குள் வலசையா?
பறவைகளை வெவ்வேறு நிலத்துக்குள் அடைக்கும் புவியரசியலைச் சங்க காலத்தில் காணலாம். சங்க இலக்கியங்கள் ஐந்திணைக்குள்ளும், நவீன ஆய்வுகள் ‘இனங்க’ளாகவும் வகைப்படுத்தின. மலபாரிலும் நீலகிரியிலும் இருந்த பறவைகள் இந்தியாவின் பிற பகுதிகளுக்குத் தென்படாது என்கிற ஜெர்டனின் பார்வையில் புவியரசியல் உள்ளது.
மானுடவியலாளரான தர்ட்ஸன் தென்னிந்தியப் பறவைகளை 21 இனங்களாக வகைப்படுத்தினார் (1913, பக். 92-94). ‘ஐந்திணை’, ‘இன’ வகைப்படுத்தல்கள் அடிப்படையில் வேறுபட்டாலும் புவியரசியலில் இணைகின்றன. புறநானூற்றில் பிசிராந்தையார் பாடலின் அன்னச் சேவலைத் தற்கால ஆய்வுகள் பூநாரை (Flamingo) என்கின்றன. பிசிராந்தையார் அக்காலத்திலேயே வலசைப் பறவையைப் பற்றிப் (migratory birds) பாடியுள்ளார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பிசிராந்தையார், தர்ட்ஸன் முதல் இன்றுவரை ‘வலசைப் பார்வை’ தொடர்கிறது. வலசைப் பறவைகள் இந்தியாவுக்கு வந்துசெல்கின்ற காலத்திலும் நேரத்திலும் மாறுபாடுகள் இருப்பதாகவும்; டாக்காவில் மே இறுதியில் வடகிழக்கு நோக்கி ஒரு மாலைப் பொழுதில் தொடங்கி இரவு வரையும் கூட்டம் கூட்டமாகப் பறந்ததைக் கண்டதாகவும் ஜெர்டன் எழுதியிருக்கிறார்.