

செயற்கை நுண்ணறிவு, விண்வெளிச் சுற்றுலா, தானியங்கி கார்கள் என அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியை உலகம் கண்ணுறும் இக்காலக்கட்டத்தில்கூட, தண்ணீருக்காகப் பெண்கள் கிலோமீட்டர் கணக்கில் நடக்கும் அவலநிலை உலகில் தொடரத்தான் செய்கிறது.
யுனிசெஃப் முன்வைக்கும் புள்ளிவிவரத்தில், உலக அளவில் நாள்தோறும் பெண்கள் தண்ணீருக்காக மட்டுமே செலவிடும் நேரம் ஏறக்குறைய 20 கோடி மணித்துளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆப்ரிக்கக் கண்டத்தில், காங்கோ தொடங்கி செஷல்ஸ் வரைக்குமான சப்-சஹாரா பகுதியில், 80% பெண்களும் பெண் குழந்தைகளும் தண்ணீர் கொண்டுவரும் ‘பணியில்’ ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆண்களின் பங்கு மிகக் குறைவு. எனவே, ஒவ்வொரு பெண்ணின் தண்ணீர்ச் சுமையையும் குறைத்து, அவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்வதே தொழில்நுட்பத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும்.
உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தினர் சுத்தமான குடிநீருக்காகப் போராடிவருவது குறிப்பிடத்தக்கது. வருங்காலம் பற்றிய தரவுகள் இன்னும் அச்சமூட்டுகின்றன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், வரும் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் கடும் நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என ஐ.நா எச்சரிக்கிறது. இவர்களில் நேரடிப் பாதிப்பு பெரும்பாலும் பெண்களுக்குத்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பாலினச் சமத்துவமின்மை
2026ஆம் ஆண்டு உலகத் தண்ணீர் நாளின் கருப்பொருள் ‘தண்ணீரும் பாலினமும்’ (Water and Gender). அதன் முழக்கம் ‘தண்ணீர் பாயும் இடமெல்லாம் சமத்துவம் வளரும்’ (Where water flows, equality grows). ஒரு பெண், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 20 லிட்டர் எடையுள்ள தண்ணீரைச் ‘சுமப்பது’ அவர்களின் வாழ்நாள் சாபமாக மாறிவிடும்.
இவ்வளவு பெரிய எடையைத் தலையில் சுமக்கும்போது, கழுத்து எலும்புகள் மிக இளம் வயதிலேயே தேய்மானம் அடையக்கூடும். மேலும், தண்டுவடத்தில் ஏற்படும் அழுத்தம், அப்பெண்ணின் உடல் அமைப்பையே மாற்றக்கூடும். நாள்பட்ட இடுப்புவலிக்கும் இது காரணமாகிறது.
பெண்களின் ஆரோக்கியமே ஒரு சமூகத்தின் ஆரோக்கியம். பெண்கள் தண்ணீருக்காகச் செலவிடும் ஒவ்வொரு மணி நேரமும், அவர்களின் கல்வி கற்கும் நேரத்தையும் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்பையும் பறிக்கும் மிகப்பெரிய சுமை.