

‘தொழில்’ என்பதற்கான வரையறை, தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பால் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் நான்கு நீதிபதிகள், ‘இந்தப் பரிசீலனையே தேவையற்றது, கல்லூரிகளில் படிப்பதற்குத்தான் பயன்படும்’ என்று இந்தத் தீர்ப்பை எதிர்த்து உள்ளனர்.
இதன் பின்னணி என்ன? பெங்களூரு குடிநீர் வழங்கல் - கழிவுநீர் அகற்றும் வாரிய வழக்கில் 1978இல் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் வழங்கிய தீர்ப்பு, ஏறத்தாழ 50 ஆண்டு காலமாக நீதிமன்றங்களை வழிநடத்தி வந்தது. ‘தொழில்’ என்பது என்ன என்பதை மூன்று சோதனைகள் மூலம் அந்தத் தீர்ப்பு வகைப்படுத்தி உள்ளது.
அதன்படி ஒரு தொழில் என்பது மூன்று அம்சங்களைக் கொண்டது. அவை: 1. ஒழுங்கமைந்த நடவடிக்கை, 2. தொழிலாளர் - முதலாளி ஒத்துழைப்பு, 3. மனிதத் தேவைகளையும் விருப்பத்தையும் நிறைவுசெய்யும் பொருள்களையும் சேவையையும் உற்பத்திசெய்தல், வழங்குதல், விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகளைக் கொண்டிருப்பது.
இதில் முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதோ லாப நோக்கம் இருக்க வேண்டும் என்பதோ தேவையில்லை. முதலீடும் லாப நோக்கமும் இல்லாவிட்டாலும் மேற்கண்ட மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தால் அதுதான் தொழில். இப்படித் தொழில் என்கிற வரையறைக்குள் ஒரு நிறுவனம் வருமானால், அதற்குத் தொழில் தகராறு சட்டம் பொருந்தும்.
கல்லூரிகள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூக நிறுவனங்கள், மனிதநேயச் சேவை செய்யும் நிறுவனங்கள் ஆகியவை அனைத்தும் தொழில் என்கிற வரையறைக்குள் வரும்.
தீர்ப்பும் சட்டமும்
இந்தத் தீர்ப்பு வந்து நான்கு ஆண்டுகள் கழிந்தபின் 1982இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஒரு தொழில் தகராறு திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதில் இந்த முச்சோதனைகள் ஏற்கப்பட்டன.