

நாடு முழுவதும் உள்ள 362 சிறார் நீதி வாரியங்களில் 2023, அக்டோபர் 31 நிலவரப்படி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் 55% தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக ‘இந்திய நீதி அறிக்கை’ என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 21 மாநிலங்களிடம் இருந்து ஏறத்தாழ 250 மனுக்கள் வழியாக இந்தத் தரவுகள் பெறப்பட்டிருக்கின்றன. நீதித் துறையின் நான்கு தூண்களாக விளங்கும் காவல் துறை, சிறைத் துறை, நீதிமன்றங்கள், சட்ட சேவை ஆகியவை சிறார் நலன் சார்ந்து செயல்படுவதில் உள்ள போதாமையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.